உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் ஏராளமான இலக்குகளை குறி வைத்தும், அந்நாட்டின் நகரங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன.
உக்ரைந் ரஷ்யா இடையேயான போர் கடந்த 8 மாதங்களாக நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டுள்ளது. இதனிடையே உக்ரைனின் முக்கிய நகரான கார்கீவ்வில் நேற்று பல்வேறு இடங்களில் ரஷ்ய படைகள் திடீரென சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இதில், முக்கிய மருத்துவ நிறுவனம் உள்பட பல்வேறு கட்டங்கள் தீக்கிரையாகின. உயிரிழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தை உக்ரைன் தகர்த்துள்ளது. பாலத்தின் மீது வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி வெடிக்க வைக்கப்பட்டு பாலம் தகர்க்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால், அந்த பாலத்தில், ரயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பாலத்தின் ஒரு பகுதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதாகிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்?
உக்ரைனின் கிரிமீயா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. அதன்பின்னர், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவின் பேரில், கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் 2018ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் ரயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பாலம் ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கிறது.
உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து நேட்டோ படையில் இணையவும் உக்ரைன் விருப்பம் காட்டி வருகிறது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை உக்ரைன் மீற முயற்சிப்பதால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்த நிலையில், போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.