கொலுசுக்கு ஆசைப்பட்டு 100 வயது மதிக்கத்தக்க பெண்ணின் காலையே கொள்ளையர்கள் வெட்டிச்சென்ற கொடூர சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியே வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அங்குவந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் காலிலிருந்த பழங்கால நகையான கொலுசை பறிக்க முயன்றுள்ளனர். அதற்காக மூதாட்டியின் கால்களையே வெட்டி கொலுசை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜெய்ப்பூர் காவல்துறை அதிகாரி கல்தா பி.எஸ் கூறுகையில், ’’கிட்டத்தட்ட 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் கொலுசை பறிக்க முயன்றபோது கொள்ளையர்கள் கொலுசுடன் கால்களையும் வெட்டி பறித்துச்சென்றனர். வீட்டிற்கு அருகில் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த மூதாட்டியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கால்கள் தவிர கழுத்திலும் கொடூரமான காயம் ஏற்பட்டுள்ளது.
மூதாட்டியின் கால்களை வெட்ட கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெட்டப்பட்ட பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன. தற்போது மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
இதுகுறித்து மூதாட்டியின் மகள் கங்காதேவி கூறுகையில், ‘’எனது அம்மா கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வீட்டிற்கு வெளியே உள்ள வடிகால் வாய்க்காலுக்கு அருகே துடித்துக்கொண்டிருப்பதாக எனது மகள் என்னிடம் வந்து கூறினாள். உடனடியாக ஓடிச்சென்று வெட்டிக்கிடந்த பாகங்களையும், தாயையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தோம்’’ என்று கூறினார்.
மூதாட்டியின் பேத்தி பேசுகையில், ‘’எங்கள் நிலத்தின் உரிமையாளர் எனது பாட்டி கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வெளியே கிடப்பதாக என்னிடம் தெரிவித்தார். நான் ஓடிவந்து எனது அம்மாவிடம் இதுகுறித்து கூறினேன். உடனடியாக உறவினர்களை அழைத்துவரும்படி அம்மா என்னை அனுப்பினார். நான் விரைந்து அழைத்துவந்து, உடனடியாக பாட்டியை மருத்துவமனையில் சேர்த்தோம்’’ என்று கூறினார். குற்றவாளிகளிடமிருந்து கொலுசு பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM