ராமநாதபுரம் நீதிமன்ற வைப்பறையில் இருந்த மது பாட்டில்கள் மாயம் – ஊழியர்களே திருடினார்களா?!

ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் அமைந்துள்ளது. இதில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் முதன்மை நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் எண்‌ 1 மற்றும் 2, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்கள், புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருள்கள் அந்தந்த நீதிமன்றங்களின் வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வழக்கு விசாரணை முடிந்து நீதிபதிகள் முன்னிலையில் அவை அழிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய போலீஸார் பறிமுதல் செய்து ஒப்படைத்த மது பாட்டில்கள் அனைத்தும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2க்கு சொந்தமான வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுருந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக அந்த மது பாட்டில்கள் ‌நீதிமன்ற வைப்பறையில் இருந்து எடுத்து வரப்பட்டபோது அதில் சில மது பாட்டில்கள் மாயமாகி இருந்ததாக கூறப்படுகிறது.

கேளிக்கை காவல்நிலையம்

இதுகுறித்து நீதிமன்ற ஊழியர்களிடம் உயர் அதிகாரிகள் விசாரித்ததில், அதே நீதிமன்றத்தில் ஆவண எழுத்தராக பணிபுரியும் ராமலிங்கம் என்பவரும், மகிளா நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் தினேஷ் என்பவரும் அலுவலகத்தில் இருந்து சாவியை எடுத்துச் சென்று வைப்பறையில் இருந்த மது பாட்டில்களை திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 2ன் தலைமை எழுத்தர் ராஜ்குமார் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் அவர்கள் இருவர் மீதும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.