வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை தற்போது வந்துவிட்டது, இப்போதெல்லாம் யாருமே மிதிவண்டிகளை பயன்படுத்துவதில்லை. பைக், கார், பேருந்து போன்ற வாகனங்களை தான் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர், இதுபோன்ற வாகனங்கள் ஒருபுறம் நமக்கு சௌகரியத்தை கொடுத்தாலும் மறுபுறம் இது நம்முடைய சுற்றுசூழலுக்கு முழுக்க முழுக்க தீங்கினை விளைவிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சு புகையால் நமது வளிமண்டலம் மாசடைகிறது, நமது சுற்றுசூழல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகைப்பாவையாக வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகள் இருக்கின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாகவே காற்று மாசுபாடு அதிகமாக இருந்து வருகிறது, அதற்கு காரணம் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பது தான்.
டெல்லி அரசு கற்று மாசுபாட்டை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, சில வருடங்களுக்கு முன்னர் ஒற்றை எண் கொண்ட வாகனங்கள் மட்டும் இந்த நாளில் செல்ல வேண்டும் என்றும் இரட்டை எண் கொண்ட வாகனங்கள் இந்த நாட்களில் செல்ல வேண்டும் என்று சில அட்டவணை அமைத்து செயல்படுத்தியது. வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வகையான அறிவிப்புகளை ஒவ்வொரு அரசும் அறிவித்து வருகிறது, ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது அல்லது அபராதம் விதிக்கப்படும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பது போன்ற பல அறிவிப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டெல்லி அரசு வாகன ஓட்டிகளுக்கு ஒரு முக்கியமான மற்றும் வித்தியாசமான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
வாகன ஓட்டிகளுக்கு அரசின் தற்போதைய விதிமுறையின்படி, அனைத்து வகையான வாகனங்களுக்கும் வாகன ஓட்டிகள் மாசு கட்டுபாடு சான்றிதழை வைத்திருக்க வேண்டுமென்றும், அப்படி சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எவ்வித எரிபொருளும் வழங்கப்படமாட்டாது என்றும் அதிரடியான அறிவிப்பினை டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை டெல்லியின் சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார் மற்றும் இந்த புதிய விதிமுறை அக்டோபர்-25 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் அரசு காற்று மாசுபாட்டை குறைக்க மின் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது.