புதுடெல்லி: ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் கடந்த 3 மாதங்களில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்தன. இதற்கு இந்திய நிறுவனமான மெய்டன் பார்மா சூட்டிக்கல்ஸ் தயாரித்த 4 இருமல் மருந்துகள் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்நிறுவனம் மீது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையை தொடங் கியது. தற்போது இந்நிறுவனத் துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே இருமல் மருந்து குறித்து அச்சம் ஏற்பட்ட நிலை யில், பிரச்சினைக்கு உள்ளான நிறுவனத்தின் 4 இருமல் மருந்துகள் இந்தியாவில் விற்கப்படவில்லை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கம் அளித்தது. இந்நிறுவனம் முந்தைய ஆண்டுகளில் பலமுறை தரமற்ற மருந்துகளை தயாரித்து பிரச்சினைக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் 1990 முதல் செயல்படுகிறது. ஹரியாணா, இமாச்சல் ஆகிய இடங்களில் இந்நிறுவன மருந்து தயாரிப்பு ஆலைகள் உள்ளன.
இந்நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மருந்துத் தயாரிப்புகள் தரமற்றவை என்று கூறி, 2011-ல் பிஹார் அரசு இந்நிறுவனத்தை கருப்புப்பட்டியலில் சேர்த்தது. அதையடுத்து 2015-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்நிறுவனத்தின் சில தயாரிப் புகள் தரமற்றவையாக இருந்தது தெரிய வந்தது. 2017-ம் ஆண்டு கேரளா மாநில அரசு இந்நிறுவனத்தின் தரமற்ற தயாரிப்புக்காக அபராதம் விதித்தது. கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவில் 5 முறை இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தரச் சோதனையில் தோல்வி அடைந்தன.
இந்நிறுவனம் மருந்துகளை வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரம் குறித்து
சந்தேகங்கள் முன்வைக்கப்பட் டுள்ளன. 2014-ம் ஆண்டு வியட்நாம் அரசு தரமற்ற மருந்துகளை தயாரித்த 39 நிறுவனங்களை கருப்புப்பட்டியலில் சேர்த்தது. அவற்றுள், மெய்டன் பார்மா சூட்டிக்கல்ஸ் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் தயாரித்த 4 இருமல் மருந்துகளில் அளவுக்கு அதிகமாக டைஎத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் கலந்திருப்பதுதான் குழந்தைகளின் சிறுநீரக பாதிப்புக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான டைஎத்திலீன் கிளைக்கால் கலந்த மருந்துகளால் குழந்தைகள் இறந்த நிகழ்வுகள் இந்தியாவில் பலமுறை நடந்துள்ளன. 2020-ம்
ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இருமல்மருந்து குடித்த 12 குழந்தைகள் உயிரிழந்தன.
அந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1998-ல் டெல்லியில் 33 குழந்தைகளும், 1986-ல் மும்பையில் 14 குழந்தைகளும், 1973-ல் சென்னையில் 14 குழந்தைகளும் அளவுக்கு அதிகமான டைஎத்திலீன் கிளைக்கால் கலந்த மருந்துகளால் உயிரிழந்தன.