2019 முதல் 2021ம் ஆண்டு வரை கலப்படம், போலி மருந்து சப்ளை செய்த 384 பேர் கைது; காம்பியா விவகாரத்துக்கு மத்தியில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை கலப்படம், போலி மருந்து சப்ளை செய்த விவகாரத்தில் 384 பேர் கைது செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அரியானாவைச் சேர்ந்த தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அந்த மருந்தை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் உலக சுகாதார நிறுவனமும், இந்திய நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. சம்பந்தப்பட்ட நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து, இந்தியாவில்  விற்கப்படவில்லை என்றும், அவை ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்பட்டவை என்றும்  ஒன்றிய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அந்த மருந்து நிறுவனத்தின் நான்கு சிரப்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு  அனுப்பப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு நடவடிக்கை  தொடங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கலப்படம் மற்றும் போலியான மருந்து சப்ளை விவகாரம் தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 462 மருந்துகள் போலியானவை என்று கண்டறியப்பட்டது; அதனால் இவ்விகாரத்தில் தொடர்புடைய 384 பேர் கைது செய்யப்பட்டதாக ஒன்றிய அரசின் மருந்துகள் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் மீதான ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதாவது 2019-20ம் ஆண்டில் மொத்தம் 81,329 மருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 2,497 மாதிரிகள் தரமற்றவை என்றும், 199 போலியானவை என்றும் அறிவிக்கப்பட்டன. இதேபோல், 2020-21ம் ஆண்டில் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட 84,874 மாதிரிகளில், 2,652 மாதிரிகள் தரமற்றவை என்றும், 263 போலியானது என்றும் கண்டறியப்பட்டது. மேற்கண்ட இரு நிதியாண்டிலும் முறையே 220 மற்றும் 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.