Video: அய்யோ…பாவம்! லாரியில் பலமாக மோதிய காண்டாமிருகம் – சாலையில் சரிந்து விழுந்தது!

இந்தியாவில் புலி, காண்டாமிருகம் போன்ற பல்வேறு அரிய உயிரினங்கள் இருக்கின்றன. இதுபோன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளுக்கு என பாதுகாப்பட்ட பகுதியை அமைத்து, பல்வேறு சூழலியல் சார்ந்த திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

அந்த வகையில், அசாம் மாநிலத்தின் அதிகம் காணப்படும் காண்டாமிருகங்கள் வசிக்கும் வனப்பகுதியை காசிரங்கா தேசிய பூங்காவாக அரசு பாதுகாத்துவருகிறது. காண்டாமிருகங்களை வேட்டையாடுவதை தடுக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் வனத்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் இதில் பங்காற்றுகின்றன. இந்நிலையில், காசிரங்கா தேசிய பூங்காவை ஒட்டி அமைந்திருக்கும் ஹல்டிபாரி பகுதியை அடுத்த நெடுஞ்சாலையில் லாரி ஒன்று, வேகமாக வந்துகொண்டிருந்தபோது திடீரென சாலைக்கு வந்த காண்டாமிருகம் அந்த லாரியின் மீது மோதியது.

லாரியை வேகமாக முட்டி மோதியதில், அந்த காண்டமிருகம் சம்பவ இடத்திலேயே தள்ளாடியபடி சரிந்து விழுந்து. இருப்பினும், உடனடியாக சாலையில் இருந்து எழுந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமாரவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா சம்பவம் குறித்து விளக்கமும் அளித்துள்ளார். 

அவரின் பதிவில்,”காண்டாமிருகங்கள் எங்களின் சிறப்புமிக்க நண்பர்கள். காண்டாமிருகங்களின் வசிப்பிடங்களில் எந்தவிதமான அத்துமீறலையும் அரசு அனுமதிக்காது. ஹல்டிபாரியில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. விபத்திற்குள்ளான காண்டாமிருகம் தற்போது நலமுடன் இருக்கிறது. விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பிடித்து அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. காசிரங்காவில் விலங்குகளை பாதுகாக்க, 32 கி.மீ நீளத்திற்கு சிறப்பு வழித்தடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வனவிலங்குகளின் பாதுகாப்பின்மை, வனப்பகுதிகள் குறித்த விளிப்புணர்வின்மை ஆகியவற்றை குறித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். காசிரங்கா தேசிய பூங்காவுக்கான சுற்றுலாவை முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, ஈஷா சத்குரு உடன் கடந்த செப். 22ஆம் தேதி தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.