90களில் `நீங்கள் கேட்ட பாடல்’ விஜய சாரதி என்றால் பலருக்கும் சட்டென இவர் முகம் நினைவில் வரும். விகடன் இணையதளத்தில் வெளியாகும் `அப்போ இப்போ’ தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம். அதே துள்ளலுடன் ரீவைண்ட் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
“ ` நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சிக்கு தேவதர்ஷினி ரெஃபர் பண்ணி ஆடிஷனில் கலந்துகிட்டு செலக்ட் ஆனேன். ஆதிக்குப் பிறகு நான் தொகுத்து வழங்க ஆரம்பிச்சேன். அந்த ஷோவை பொதுவா ஒவ்வொரு ஊருக்குப் போய் நேயர்களுடைய வீட்டில் அவங்களுக்குப் பிடிச்ச பாட்டு என்னன்னு கேட்போம். அதுல டெக்னிக்கலா சில சவால்கள் இருந்துச்சு. சரி, என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப ஒவ்வொரு ஊரிலுள்ள முக்கியமான இடங்களுக்கு எல்லாரையும் வரச் சொல்லி அங்க பேசிடலாம்னு முடிவெடுத்தோம். அப்படி பண்ணும்போது நாங்க போகிற நேயர்கள் சிலர் வசதியானவங்களாக இருக்கலாம், சிலர் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அவங்க டிவியில் பார்க்கும்போது நம்ம வீடு இப்படி இருக்கேன்னு சொல்லி வருத்தப்படவும் வாய்ப்பிருக்கிறதால அதைத் தவிர்த்திட முடியும். 96-ல் ஆரம்பிச்ச நிகழ்ச்சி கிட்டத்தட்ட 2007 வரைக்கும் போச்சு. 586 எபிசோட் பண்ணினேன். அதுக்கப்புறம் கரியரை வேற மாதிரி செட் பண்ணிக்கிட்டேன். முழு நேரமா சன் டிவியில் பணிக்கு சேர்ந்துட்டேன்.
`நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சியால பல வாய்ப்புகளை இழந்திருக்கேன். அந்த ஷோ பண்றதால நான் ஊரிலேயே இருக்க மாட்டேன்னு யோசிச்சு என்னை கூப்பிடவே மாட்டாங்க. ஒரு முறை கே.பி சாரே இப்படியான எண்ணம் இருக்கிறதா என்கிட்ட சொல்லியிருக்கார். இந்த நிகழ்ச்சியினால பல புராஜெக்ட் மிஸ் ஆனது உண்மை. ஆனா, அதுக்கு பதிலா பலருடைய அன்பு கிடைச்சிருக்கு. இப்ப வரைக்குமே அதே அன்போடு என்கிட்ட மக்கள் பழகுறாங்க. அது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
ஒருமுறை `அழகிய தமிழ் மகன்’ படத்துக்காக விஜய் சாரையும், ஏஆர் ரஹ்மான் சாரையும் பேட்டி எடுக்கிறதுக்காக போயிருந்தேன். அங்க விஜய் சார் என்கிட்ட, `நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே?’ன்னு கேட்டார். சார் அதெல்லாம் ஒன்னுமில்லை கேளுங்கன்னு சொல்லவும், `நீங்க ஏன் பின்னாடியே நடக்குறீங்க?’ன்னு கேட்டார். அப்ப இவர் நம்மளுடைய ஷோ பார்த்திருக்கார்னு தோணுச்சு. பிறகு, அவர்கிட்ட பல விஷயங்கள் ஷோ பற்றிப் பேசினேன். ரெண்டு பேரும் அரட்டை அடிச்சு ரொம்பவே சகஜமா அந்த நேர்காணல் எடுத்தோம். பின்னாடி நடக்கிறதுங்கிறது இப்ப என் அடையாளமாகவே மாறிடுச்சு. எப்படி எம்ஜிஆர் அவர்களை `உலகம் சுற்றும் வாலிபன்’ன்னு கூப்பிட்டாங்களோ அப்படி என்னை `டெலிவிஷனின் உலகம் சுற்றும் வாலிபன்’ன்னு சொல்லுவாங்க என்றவரிடம் அவருடைய தந்தை மறைந்த நடிகர் சசிகுமார் குறித்துக் கேட்டோம்.
சின்ன வயசிலிருந்தே அம்மா, அப்பா ரெண்டு பேருடைய ஞாபகங்களும் எனக்கு ரொம்பவே குறைவு. அப்பாவை படத்திலாவது பார்த்துக்கிறோம்.. ஆனா, அம்மாவுக்கு அதுவும் கிடையாது. ரொம்ப சின்ன வயசிலேயே ரெண்டு பேருடைய அரவணைப்புமில்லாம தான் நானும், என் அக்காவும் வளர்ந்தோம். அவங்களுக்கு இணையாக எங்க மேல அன்போடும், அக்கறையோடும் எங்களை வளர்க்கிறதுக்காக பாட்டி என்கிற கேரக்டரை கடவுள் எங்களுக்குக் கொடுத்தார். `துருப்பிடிக்கும் மனசு’ சீரியலுக்காக காரைக்குடி போயிருந்தேன். அங்க ஒரு பெரியவர் என்னைப் பார்த்து, `நீதான் சசிகுமார் பையனான்னு கேட்டார்!’. ஆமான்னு சொல்லவும் என் கூட வான்னு ஒரு ரூமுக்கு கூட்டிட்டுப் போனார். உங்க அப்பா காங்கிரஸ் மீட்டிங்கிற்காக வந்தப்ப இந்த அறையில் தான் தங்கியிருந்தார்னு சொன்னார். அந்த சமயம் ரொம்பவே எமோஷனலாகிடுச்சு. எண்ண அலைகள் காற்றில் இருக்கும்னுலாம் சொல்லுவாங்க. அப்பா இங்க ஏதாவது விட்டுட்டுப் போயிருக்காரான்னு இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்த நிமிடம் அங்க தேடத் தோணுச்சு” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தன் கரியர் குறித்து மேலும் பகிர்ந்தவர், “அஜித் சாரை பேட்டி எடுக்கும்போது அவர் சொன்னது இது ; `என்ன வேணும்னாலும் கேள்வி கேட்கலாம் அது உங்களுடைய உரிமை… அதுக்கு பதில் சொல்லணுமா, வேண்டாமாங்கிறது என் சாய்ஸ்!’ன்னு சொன்னார். விஜயசாரதிங்கிற என் மீது தன்னம்பிக்கையும், திமிரும் எனக்கு எப்பவும் நிறையவே இருக்கும்” என்றவரிடம் இலங்கையில் சில காலம் தங்கியிருந்தது குறித்துப் பேசினோம்.
“ வேலை விஷயமா ஶ்ரீலங்கா போயிருந்தேன். கோவிட் லாக்டவுணில் அங்கேயே இருக்க வேண்டியதாகிடுச்சு. கிட்டத்தட்ட மூணு வருஷம் அங்க இருந்தேன். `சூப்பர் ஸ்டார்ஸ்’ன்னு வித்தியாசமான மியூசிக் ரியாலிட்டி ஷோ பிளான் பண்ணியிருந்தேன். கோவிட் சூழலினால் அதைத் தொடர முடியாம போச்சு. நடுவுல ஒருத்தர் உதவி பண்றதா சொல்லி என்கிட்ட 50லட்சம் ஏமாத்திட்டு போயிட்டார். அந்த நபர் இந்தப் பேட்டியைப் பார்த்தாருன்னா தயவு செய்து இனியாவது திருந்துங்க! நாம பண்ற நல்லதுனாலும் சரி, கெட்டதுனாலும் சரி நம்ம பசங்ககிட்ட தான் வந்து விழும். ஶ்ரீலங்காங்கிறது ரொம்ப சின்ன ஊர். அங்க யார் தப்பு பண்ணாலும் ரொம்ப ஈஸியா தெரிஞ்சிடும். இப்பவே இவர்தான் என் பணத்தை மோசடி பண்ணினதுன்னு பலருக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. அங்க கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கேன்.. விசாரணையும் நடந்துட்டு இருக்கு என்றவரிடம் தற்போது கமிட் ஆகியிருக்கும் பிராஜக்ட் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.
பெரிய புரடக்ஷன் ஹவுஸூடைய வெப் சீரிஸில் நடிச்சிட்டு இருக்கேன். இயக்குநர் பிரதீப்பின் படத்தில் நடிக்கிறதுக்காக கமிட் ஆகியிருக்கேன். தவிர ஒரு வெப் சீரிஸ் பண்ணிட்டு இருக்கேன் அது டெலிவிஷனாகவும் வரலாம்!’ என்றார்.
படங்கள் – விக்னேஷ்