பரூச்: நகர்ப்புற நக்சல்கள் தங்களுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு குஜராத்துக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் நாட்டின் முதலாவது மிகப்பெரிய மருத்துவ பூங்காவுக்கு நேற்று அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:
நகர்ப்புற நக்சல்கள் தங்களது புதிய தோற்றத்தில் மாநிலத்துக்குள் நுழைய முயன்று வருகின்றனர். இப்போது அவர்கள் உடைகளை மாற்றியுள்ளனர். அந்த நகர்ப்புற நக்சல்கள், ஆற்றல் மிக்க நமது இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றனர்.
நமது அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்க முயலும்அந்த நகர்ப்புற நக்சல்களை இந்த மண்ணில் செயல்பட அனுமதிக்க கூடாது. நாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்கள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் அந்நிய சக்திகளின் முகவர்களாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு ஒருபோதும் குஜராத் அடிபணியாது.மாறாக அந்த சக்திகள் இந்த மண்ணில் இருந்து அழிக்கப்படும்.
கடந்த 2014-ம் ஆண்டில் நான் பிரதமராக பதவியேற்றுக் கொண்டபோது உலகளவில் இந்திய பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்தது. ஆனால், இந்த 8 ஆண்டு கால ஆட்சியில் 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. தற்போது குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை குறி வைத்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் பல்வேறு இலவச திட்டங்களையும் அறிவித்து வருகிறார். அந்த கட்சியை மறைமுகமாக விமர்ச்சிக்கும் வகையிலேயே பிரதமர் நரேந்திர மோடி நகர்ப்புற நக்சல்கள் என்ற சொல்லாடலை கையாண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.