இரட்டை குழந்தை விவகாரம்… நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் விசாரணை?

தமிழக சுகாதாரத் துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, பருவகால மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை கையிருப்பு போன்றவை தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் 46 சுகாதார மாவட்டங்களை சேர்ந்த சுகாதார இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், 64 மருத்துவமனை இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 96% பேருக்கும், இரண்டாம் தவணை 91% பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், கூடுதலாக காலம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக சுகாதாரத் துறை கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், கையிருப்பில் வைத்துள்ளதை கொண்டு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. அதனடிப்படையில் தமிழகத்தில் தற்போது கையிருப்பில் உள்ள 9 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு விரைவில் செலுத்தப்பட உள்ளது.

கடந்த 20 நாட்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 13,178 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 19 லட்சத்து 79 ஆயிரத்து 351 நபர்கள் பரிசோதனை செய்யபட்டுள்ளனர்.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் 600 க்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 32 மருந்து சேமிப்பு கிடங்குகளில் இருந்து இவை வழங்கப்பட்டு வருகின்றன. கிடங்குகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு மருந்து, மாத்திரைகளை விநியோகம் செய்வதில் ஏதேனும் காலதாமதம் ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் விவகாரம் தொடர்பாக துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. DMS lலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கருமுட்டை மற்றும் வாடகை தாய் சட்ட விதிமுறைகளை நயன்தாரா -விக்னேஷ் சிவன் மீறி உள்ளார்களா என்பது குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க உள்ளனர். அதன் பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோரிடம் உரிய விளக்கம் கேட்கபப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.