பெங்களூரு: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்தில் அவரைச் சந்தித்த இளம்பெண் ஒருவர் கண்ணீர் சிந்தி புலம்பும் காட்சி வெளியான நிலையில், அது குறித்து ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் விவரித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்த இளம்பெண் என்னிடம் அழுது புலம்பினார். அதற்கான காரணத்தை நான் உங்களுக்கு விவரிக்கிறேன். நமது தேசத்தின் அடிப்படை மதிப்பீடுகள் மீது இந்த இளம்பெண்ணும், அவரது சகோதரரும் பெரும் மதிப்பு கொண்டுள்ளனர். ஆனால், இன்று இவர்கள் இருவரும் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களைப் போல் தேசத்தின் கனவு தங்களின் கண் முன்னாலேயே சிதைவதைக் கண்டு கடுமையான வருத்தத்தில் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் சுதந்திரம், சமத்துவம் கோட்பாடுகளைக் கேட்டே வளர்ந்தனர். அன்பும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் புகட்டப்பட்டு வளர்ந்துள்ளனர். ஆனால், இன்று கருத்து மோதல்களால் தங்களின் நண்பர்களை இழந்துவருவதாகவும், எதிர்காலம் மீதான நம்பிக்கை அழிந்து வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதுபோல் நம் தேசத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் அருகி வருவதை நினைத்தும் வருந்துகின்றனர். இந்தியா வெறுப்பால், வன்முறையால், வேலைவாய்ப்பின்மையால், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இருப்பதைக் கண்டு வருந்துகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.