கடலூர் மாவட்டம் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சாவடி பகுதியை சேர்ந்த மீனா என்பவர் கடந்த சனிக்கிழமையன்று கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்க அதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மீனாவிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிறகு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் மீனா உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையின் தவறான சிகிச்சை முறையே மீனாவின் உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டினர்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர், மீனாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் தான் உயிரிழந்தார் என்று விளக்கம் அளித்தனர். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு இரு தரப்பினரும் தனித் தனியாக புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.