கவுகாத்தி: “கூட்டுத்தலைமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றி கட்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வேன்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர், கட்சி தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியினரிடம் மல்லிகார்ஜூன கார்கே திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,”உதய்பூர் பிரகடன”த்தை அமல்படுத்துவதே எனது முக்கியமான நோக்கம்.பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல், பழங்குடி இனத்தவர் உள்ளிட்ட 50 வயதிற்கும் குறைவானவர்களை கட்சி பொறுப்புகளில் நியமித்து கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சுவேன்.
நான் ஆலோசனைகள் பெறுவது மற்றும் கூட்டுத்தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சி உறுப்பினர்கள் என் பின்னால் வருவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. அவர்கள் எனக்கு பக்கபலமாக என்னுடன் இணைந்து பயணிப்பதையே விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி கட்சியின் அடிப்படை அமைப்பினை வலுப்படுத்துவோம்.
சோனியா காந்தி என்னை அவரின் வீட்டிற்கு அழைத்து காங்கிரஸ் கட்சியை வழிநடத்துமாறு கூறினார். நான் அதற்கு அவரிடம் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த நான் மூன்று பேர்களின் பெயரை பரிந்துரைப்பதாக தெரிவித்தேன். அவர் அதனைக் கேட்கத் தயாராக இல்லை என்னை கட்சியை வழிநடத்த கேட்டுக்கொண்டார்.
காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிக்கு தலைமையேற்க தயாராக இல்லை என்பதால் தலைவர் தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டேன். சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் கட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். கட்சி உறுப்பினர்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளையும், நாட்டையும் பிளவுபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ள பாஜகவை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் போராட வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியால் முன்னேடுக்கப்பட்ட நேருவின் பாரம்பரியத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாக்க வேண்டும்.
20 வருடங்களாக கட்சியை வழிநடத்திய சோனியா காந்தியின் அனுபவத்தையும் அறிவுரையையும் கேட்பது நமது கடமை” இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாதம் 17ம் தேதி நடக்க இருக்கிற காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்பி சசி தரூரும் போட்டியிடுகின்றனர்.