வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளில் 10 ஆம் தேதி முதல் குப்பை கொட்டினால் அபராதம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், காட்பாடி தாராபடவேட்டில் மாநகராட்சி அறிவிப்பு போஸ்டரின் எதிரில் குப்பை கொட்டி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களை சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது மக்கள் குப்பைகளை பொது இடத்தில் கொண்டுவதாலும், தரம் பிரித்து தராததாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், பொது இடங்களில் குப்பை கொட்டினால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ் வீடுகள் முதல் வணிக வளாகங்கள் வரை 100 முதல் 1000 ரூபாய் வரை அபராதமும், பொது இடத்தில் குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து ஆதாரமாக கொடுப்பவர்களுக்கு 200 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இது அனைத்து இடங்களிலும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் காட்பாடி, தாராப்படவேடு பகுதியில் காட்பாடி – திருவலம் சாலையில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையின் கீலேயே மக்கள் குப்பைகளை கொட்டி சென்றுள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. வீட்டின் குப்பைகள் மட்டும் இன்றி உணவகங்களின் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. ஆகவே இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.