காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காஞ்சிபுரம் தாலுக்காவைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவை சேர்ந்த ஏகனாபுரம், எடையார்பாக்கம் குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம்,ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைத்தால் ஏகனாபுரம், நெல்வாய், தண்டலம், நாகப்பட்டு, மேலேறி, ஆகிய கிராமப்புறங்களில் குடியிருப்புகளும் அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
விமான நிலையம் அமைக்கும் திட்டத்தால் தங்கள் குடியிருப்புகளும், விளைநிலங்களும் பறிபோய் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சொந்த பகுதியிலேயே அகதிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் விமான நிலையம் அமைப்பதற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தங்களது கோரிக்கை வலியுறுத்தி 77 நாட்களாக பல்வேறு வித போராட்டங்களையும், ஊர்வலத்தையும் நடத்தி கிராம சபை கூட்டத்திலும் தீர்மானங்களையும் நிறைவேற்றியும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 17ஆம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோரிக்கை விடுத்து 13 கிராமங்களையும் சேர்ந்த கிராம மக்கள் தமிழக சட்டசபையை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். நடைபயணம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளையும் கிராம மக்களும் தீவிரமாக இறங்கி உள்ளனர்.