விவசாயத்தில் பல புதிய உத்திகளைக் கையாண்டு, லாபகரமான விவசாயத்தை சாத்தியமாக்கியிருக்கிறார் முன்னோடி விவசாயி வள்ளுவன். தொழில்முறையில் பொறியாளராக இருக்கும் இவர், விவசாயத்தை பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியிருக்கிறார். இவர் பலரும் செயல் படுத்த தயங்கும் பல உத்திகளை தன் நிலத்தில் செயல்படுத்தி வெற்றி கண்டவர்.
பொள்ளாச்சி மாவட்டம், ஆனைமலை பகுதியில் வேட்டைகாரன்புதூரில் 26 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது இவர் பண்ணை. பெரும்பாலனவர்கள் ஒற்றை பயிர் முறையை பின்பற்றும் சூழலில் பலப்பயிர் சாகுபடி செய்யும் எண்ணம் எப்படி வந்தது என அவரை கேட்ட போது “இந்த இடத்தை 2006 ஆம் ஆண்டு வாங்கினேன். இங்கு பிரதான பயிர் தென்னை. ஆரம்பம் முதலே இயற்கை விவசயம் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். தொடக்கத்தில் 3 ஆண்டுகள் இயற்கை உரங்கள் பயன்படுத்தியும் ஒரு மரத்தில் 110 காய்களுக்கு மேல் கிடைக்கவில்லை.
ஈஷா விவசாய இயக்கம் பற்றி அறிந்து கொண்ட பின்னர், 2009 ஆம் ஆண்டில் ஈஷா குழுவினர் என் நிலத்திற்கே வந்து மண் பரிசோதனை செய்தனர். அப்போது தான் மண்ணிற்கு போதுமான ஊட்டச்சத்து இல்லை என்பது தெரிந்தது. மண்ணின் கரிம அளவு 0.5 மட்டுமே இருந்தது. இதனை தொடர்ந்து மண் வளத்தை அதிகரிக்க பலப்பயிர் சாகுபடி முறையை பரிந்துரைத்தனர்.
அதன் பின் வரப்போரங்களில் டிம்பர் மரங்கள், நிலத்தில் தென்னை, அதற்குள் ஊடுபயிர்களாக பல பயிர்கள் என புதிய உத்தியை கையாண்டோம். இதில் சுமார் 1900 தென்னை, 9000 டிம்பர் மரங்கள், 700 பழ மரங்கள், 100 பப்பாளி, 600 வாழை என பல்வேறு பயிர்களை ஒன்றாக வளர்த்தோம். இதன் தொடர்ச்சியாக 12 ஆண்டுகளுக்கு பின் இப்போது மண்ணிண் கரிம வளம் 3.36 என்ற நிலைக்கு உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். எவ்வித மனித செயல்பாடுகளுமின்றி இயற்கையாக ஒரு நிலத்தில் 3 சதவீதம் அளவு கரிம வளம் கூட தோராயமாக 100 ஆண்டுகள் பிடிக்கும், ஆச்சரியமாக பலப்பயிர் சாகுபடி மூலம் இது 12 ஆண்டுகளிலேயே சாத்தியமாகியுள்ளது என்றார்.
மிகவும் ஆச்சரியமான தகவலை பகிர்ந்த அவரிடம், மண் வளம் கூடியதால் நீங்கள் கண்கூடாக கண்ட பலன் என்ன என நாம் கேட்ட போது, “ஆரம்ப காலத்தில், தென்னையில் வெறும் 100-110 காய்கள் மட்டுமே கிடைக்கும் மற்றும் காய்களின் எடை 400–450 கிராம் வரை மட்டுமே இருக்கும். இப்போது 160 காய்கள் வரை கிடைக்கிறது மற்றும் எடை 500 -550 என கூடியுள்ளது. மண் வளம் அதிகரிக்கும் போது அதிலிருந்து கிடைக்கும் இலை தழைகள் சத்துமிக்க மூடாக்காக மாறி மீண்டும் மண்ணையே சேர்கின்றன. நிலத்தினுள் நிகழும் இந்த சுழற்சியால் எனக்கு வெளியிலிருந்து இடுபொருள்கள் பெற வேண்டிய தேவை குறைகிறது. தற்சார்பு விவசாயத்தை இதன் மூலம் எட்ட முடிகிறது” என்றார்.
தன்னுடைய நிலத்தில் டிம்பர் மரங்களை அதிகமாக நட்டிருக்கும் வள்ளுவன் அவர்களிடம் லாபகரமான விவசாயத்தில் டிம்பர் மரங்களின் பங்கு என்ன என்பதை நாம் அறிய முனைந்த போது, “வரப்போரங்களில் டிம்பர் மரங்களை நட்டிருக்கிறேன். உதாரணமாக நான் நட்டிருக்கும் மலைவேம்பு ஐந்து வருடங்களில் அறுவடைக்கு வரத் தொடங்கிவிடும். சில ஆண்டுகள் முன்பு 20 மரங்களை ஒரு லட்சத்திற்கு விற்றேன். இதே போல இங்கிருக்ககூடிய பலவிதமான டிம்பர் மரங்கள் இன்னும் சில வருடங்கள் கழித்து பல லட்சத்திற்கு விற்க முடியும். டிம்பருக்கு இன்று இருக்கக்கூடிய மதிப்பையும் தேவையும் உணர்ந்தே இதை வளர்க்கிறேன்” என்றார்.
டிம்பர் மரங்கள் நீண்ட கால வருவாய்க்கு உதவும் என்கிறீர்கள் எனில் மற்ற நேரத்தில் விவசாயிகளுக்கான வருமான வாய்ப்பு குறித்து சொல்லுங்கள் என்ற நம் கேள்விக்கு “இதே கேள்வி எனக்கு இருந்தது. அதற்கு பதிலாக அமைந்தது புதுக்கோட்டையில், ஈஷா நடத்திய “சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியம்” எனும் கருத்தரங்கம். இங்கு சமவெளியில் மிளகை வளர்க்கும் விவசாயிகளை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பலப்பயிர் சாகுபடி மூலம் மிதமான காலநிலையை பண்ணையில் உருவாக்குகிற போது சமவெளியில் மிளகு சாத்தியம் என்பதை அறிந்து கொண்டேன். டிம்பர் மரங்களில் மிளகை ஏற்றி விட்ட பின் 3 ஆம் வருடத்திலிருந்து காய்க்க தொடங்கும் 6, 7 ஆண்டுகள் பின் நல்ல அறுவடை எடுக்கலாம். ஒரு ஏக்கரில் 400 கிலோ வரை அறுவடை எடுக்க முடியும். மேலும் ஒரு கிலோ மிளகு ரூ.600 – ரூ.1000 வரை விற்கும். எப்படியும் ஒரு ஏக்கரில் தோராயமாக ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும். இது மட்டுமின்றி பழங்கள், இதர பயிர்களை ஊடுபயிராக விளைவிக்கும் போது அதிலிருந்து நாம் தொடர்ந்து வருவாய் ஈட்ட முடியும். எனவே விவசாயத்தில் பயிர்கள் வெறும் மரமாக செடியாக மட்டும் இருப்பதில்லை, அவை வருவாய்கான பெரும் சாத்தியங்களாக இருக்கின்றன” என்றார்.
விவசாயத்தில் பல புதிய முயற்சிகளை துணிவுடன் மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கும் இவர் “தற்சார்பு விவசாயம் என்பது விவசாயி தன் பையில் இருக்கும் பணத்தை எடுத்து செலவழிப்பதல்ல, அனைத்து வகையிலும் பணம் விவசாயியின் பையை வந்தடைவது” இதை சாத்தியப்படுத்த மண்ணின் கரிம வளம் கூட வேண்டும், அதற்கு நல்ல தரமான மரங்களை வளர்க்க வேண்டும்” என்றார்.
இதே போல் இயற்கை விவசாயத்தில் வெல்ல நினைக்கும் விவசாயிகளின் கரங்களுக்கு மரக்கன்றுகள் எளிதில் சென்று சேர ஈஷா நாற்றுப் பண்ணைகளில் 14 வகைக்கும் மேலான டிம்பர் மரக்கன்றுகள் வெறும் ரூ. 3 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.