குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை நடக்க இருக்கிறது. அதை முன்னிட்டு ஆனந்த் மாவட்டத்தில் உள்ள வல்லப் வித்யாநகரில் பா.ஜ.க-வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, “சர்தார் வல்லபாய் படேல் அப்போதைய இந்தியாவின் சமஸ்தானங்களின் இணைப்புப் பிரச்னைகளைத் தீர்த்தார், ஆனால் `ஒருவரால்’ காஷ்மீர் பிரசனையைத் தீர்க்க முடியவில்லை.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் பாதையில் நடப்பதால் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடிந்தது.
சர்தார் படேலின் அடிச்சுவடுகளை நான் பின்பற்றுவதால், எனக்கு படேலின் நிலத்தின் மீது மதிப்பு உள்ளது, அதனால்தான் காஷ்மீர் பிரச்னையை தீர்த்து, சர்தார் படேலுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தினேன். மேலும், படேலின் கனவுத் திட்டமான சர்தார் சரோவர் அணையை முடக்க நகர்ப்புற நக்சல்கள் முயற்சி செய்கிறார்கள்.
முந்தைய காங்கிரஸ் அரசு அணை கட்டும் போது, தண்ணீரை எடுத்துச் செல்ல எந்த கால்வாய் அமைப்பையும் உருவாக்கவில்லை. ஆனால் நான் 20 ஆண்டுகளில் அந்தப் பணியை எடுத்து முடித்தேன். எங்கும் தண்ணீர் சென்று சேருவதால் குஜராத்தில் விவசாயப் பொருள்கள் ஒன்பது முதல் பத்து சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.
40-50 ஆண்டு கால நேரத்தை வீணடித்து, எங்களை நீதிமன்றங்களில் சிக்கவைத்தனர். அதன் காரணமாக குஜராத்தில் உள்ள ஏழை மக்களின் பணத்தை வீணடித்தனர். இன்று சர்தார் சாகேப்பின் கனவான சர்தார் சரோவர் அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உறுப்பினர்களிடம் நீங்கள் பேசினால், சர்தார் படேலின் நினைவாக கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ஒற்றுமை சிலையை எப்போதாவது பார்வையிட்டீர்களா? என்று கேளுங்கள்.
மேலும், அவர்களிடம் சர்தார் சாஹேப் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, இப்போதாவது கொஞ்சம் பெருந்தன்மை காட்டி, சர்தார் சாஹேபின் பாதங்களுக்கு முன் வணங்குங்கள் என்று கூறுங்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
குஜராத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், சர்தார் படேலுக்கு உரிய மதிப்பை பெறுவதை உறுதி செய்வதில் பா.ஜ.க தீர்மானமாக இருந்தது. இன்று, குஜராத் மக்கள் சர்தார் சாகேப்பை கவுரவிக்க உழைத்துள்ளனர், அதை நினைத்து பா.ஜ.க பெருமிதம் கொள்கிறது.
அதுமட்டுமல்ல….. காந்திஜியின் பெயரில் பல வருடங்களாக அரசியல் செய்பவர்களுக்கு தண்டி யாத்திரை செல்லும் பாதையை மேம்படுத்தும் எண்ணம் வரவில்லை. ஆனால், பா.ஜ.க அதற்கான பணிகளை மேற்கொண்டது. முழு வழித்தடத்தையும் மேம்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி நவீன நெடுஞ்சாலையை உருவாக்கினோம். 400 கி.மீ.க்கு மேல், புதிய தலைமுறைக்கு சத்தியாகிரகத்தை அறிமுகப்படுத்தும் பிரசாரத்தை நாங்கள் மேற்கொண்டோம்.
கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு குஜராத்தில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்கியிருக்கிறது. நான்பிரதமரான பிறகு பல கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு கிராமம் மற்றும் வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் பணியை சிறப்புற செய்தோம்.
சேவை, பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான சிறந்த சூழல், கலவரங்களில் இருந்து விடுபடுதல் போன்றவற்றின் அடையாளமாக குஜராத் மாறியுள்ளது. இந்த நம்பிக்கைதான் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் பா.ஜ.க கொடி பறக்க உதவுகிறது” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.