கடலூர்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழல் குடையில் பள்ளியில் படிக்கும் சீருடை அணிந்த மாணவிக்கு, ஒரு மாணவன் மஞ்சள் கயிறு தாலி கட்டிய வீடியோ வைரல் ஆனது. மாணவியின் கழுத்தில் மாணவன் தாலி கட்டும் போது எதிரே நிற்கும் மாணவர்கள் சிலர் பூக்களை தூவி சிரிக்கின்றனர். விசாரணையில் இந்த மாணவி சிதம்பரம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவதாக தெரிகிறது.
தாலி கட்டிய மாணவன் புவனகிரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படிப்பதும், இருவரும் 17 வயது உடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த மாணவியின் தந்தை சிதம்பரம் நகர காவல்நிலையத்தில், வீடியோவை வெளியிட்ட பாலகணேஷ்(42) என்பவர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணைக்கு பின்னர் பாலகணேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிதம்பரம் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறியதால், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.
அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட மாணவியை போலீசார் கடலூரில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மாணவிக்கு தாலி கட்டிய மாணவனிடம் தொடர்ந்து 2வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இன்னும் சற்று நேரத்தில் பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு மாணவனை அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.