சென்னை: தீவுதிடலில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளை வரும் 16ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை தீவுத்திடலில் வழக்கமாக பட்டாசு கடை அமைக்கப்படுவது உண்டு. ஆனால், சமீப ஆண்டுகளாக, பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை குறைந்து வருகிறது. நடப்பாண்டு தீபாவளி வரும் 24ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. அதன்படி தீவுத்திடல் மைதானத்தில் 55 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் ஒவ்வொன்றும் தலா 3 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் பட்டாசு கடைகள் அருகே செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீவுத்திடல் பட்டாசு கடைகளில் அக்டோபர் 11-ந் தேதி விற்பனை தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல, தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி வரை அங்கு பட்டாசு விற்பனை நடைபெறும் என கூறப்பட்டது.
ஆனால், தற்போது பட்டாசு கடைகயை வரும் 16ந்தேதிதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க இருப்பதால், வரும் 16ந்தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பட்டாசு விற்பனை 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதன்முறையாக, தீவுத்திடலில் உள்ள அனைத்து கடைகளில் ஒரே விலையில், பட்டாசுகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது .