தருமபுரி: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் ஒகேனக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 30ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல் காவேரி ஆற்றில் பரிசில்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நாற்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை நேற்று, மற்றும் நேற்று முன்தினம் பெய்து வருவதால் ஒகேனக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒக்கேனக்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது தற்போதைய நிலவரபடி 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசில் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும் மழையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரிக்கவும், குறைவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.