கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன. அதே மாவட்டத்தைச் சேர்ந்த ரோஸ்லின், பத்மா என்ற இருவரை, ஒரு தம்பதி தங்களின் பண கஷ்டங்கள் தீர நரபலி செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்த தம்பதியையும், அவர்களின் ஏஜெண்ட் ஒருவரையும் போலீசார் இன்று (அக். 11) செய்யப்பட்டுள்ளனர். ரோஸ்லின், பத்மா ஆகிய இருவருக்கும் ஏறத்தாழ 50 வயதிருக்கும். அவர்கள் இருவரும் எர்ணாகுளத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், ரோஸ்லின் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தும், பத்மா கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தும் காணமால் போனதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களின் புதைக்கப்பட்ட உடல்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் போலீசார் கைப்பற்றினர். அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டு, உடல் துண்டாக துண்டாக வெட்டப்பட்டு புதைக்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மசாஜ் தெரப்பிஸ்டாக இருக்கும் பகவந்த் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர்தான் இந்த கொலைகளை செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவர்களை நரபலி கொடுப்பதன் (கொலை செய்வதன்) மூலம் தங்களின் பண கஷ்டங்கள் தீரும் என அந்த தம்பதியினர் நம்பி இந்த கொலைகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலைகளை செய்ய உதவியாக இருந்து, அவர்களின் ஏஜெண்டாக செயல்பட்ட ரஷீத் (எ) முகமது ஷஃபி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த இரண்டு பெண்களையும் இவர்தான் கடத்தி வந்து, அந்த தம்பதியிடம் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.
பத்மா காணமால் போனதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தான் இந்த கொலைகளை குறித்து துப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து, கொச்சி நகர காவல் ஆணையர் நாகராஜூ சக்கிளம் கூறியதாவது,”எர்ணாகுளத்தில் ஒரு பெண் காணாமல் போன வழக்கில் விசாரணை மேற்கொண்டபோது, அவர் பத்தனம்தெட்டாவில் ஒரு தம்பதியின் வீட்டில் கொலை செய்யப்பட்டது எங்களது தெரியவந்தது. பல துண்டுகளாக வெட்டப்பட்டு, அவர்களின் வீட்டில் உடலை புதைத்து வைத்துள்ளது தெரியவந்தது. அவர்களின் பண கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக பத்மாவை நரபலி கொடுத்துள்ளனர்.
அவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், ஜூலை மாதமும் மற்றொரு பெண்ணையும் இதேபோன்று கொலை செய்து புதைத்து வைத்த உண்மையை தம்பதியினர் ஒப்புக்கொண்டுள்ளனர். முகமது ஷஃபி ஏஜெண்டாக இருந்தது மட்டுமின்றி, இந்த கொலைகளில் ஒரு பகுதியாக இருந்து செயல்பட்டுள்ளார். இதுகுறித்து, இன்னும் அதிகம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொலைகளில் வேறு யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் உள்பட பல்வேறு வகைகளில் இதனை விசாரித்து வருகிறோம்” என்றார்.
மாந்திரீகம் மற்றும் நரபலி ஆகிய காரணங்களால், அந்த பெண்களின் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. உடல்களை முழுமையாக தோண்டியெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.