ஏலகிரி : ஏலகிரிமலை நிலாவூர் பகுதியில் புரட்டாசி மாதம் 3ம் சனிக்கிழமை திருவிழாவையொட்டி கபடி போட்டி நடைபெற்றது. இதில் ஏலகிரிமலை, ஜவ்வாது மலை, ஆகிய பகுதிகளில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் அனைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முக்கிய தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர்.
சுமார் 200 முதல் நானூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இம்மலையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 3ம் சனிக்கிழமை ஏலகிரி மலையில் அதிவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனையொட்டி நேற்று நிலாவூர் கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது.
இது மலைவாழ் மக்களுக்கு மட்டுமே நடைபெற்றது. இதில் ஏலகிரிமலை, ஜவ்வாது மலை, ஆகிய பகுதியில் இருந்து 20 கபடி குழுவினர் கலந்த கொண்டனர். மேலும் விழாகுழுவினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன் கபாடி சீருடைகளை இலவசமாக வழங்கினார். மேலும் கபடி குழுவினருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இப்போட்டியில் நடுவர் ராமசாமி போட்டியை சிறப்பாக நடத்தினார். மேலும் வெற்றிபெற்ற கபடி குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.