பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னையில் தொழில்நுட்ப இயக்குநகரத்தில் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடம் என்பது இருக்காது. இன்னும் 1.10 லட்சம் பேருக்கு அக்டோபர் 13 ஆம் தேதி பொறியியல் 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்” என்று கூறினார்.
மேலும் அவர், “அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான 4000 இடங்களை நிரப்ப உள்ளோம். மொத்த காலிப் பணியிடங்கள் 6906 உள்ளன. இதில் 4000 இடங்களை நிரப்ப உள்ளோம். இந்தப் பணியிடங்களுக்கும் டிஆர்பி மூலமாக எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.
கௌரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து நேர்முகத் தேர்வில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வில் மொத்தமே 30 மதிப்பெண்கள்தான். இதில், ஓர் ஆண்டு கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வீதம், 7.5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
எனவே கௌரவ விரிவுரையாளர்கள் எழுத்துத் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்காக மொத்த மதிப்பெண்களில் 50 சதவீதமாக இந்த 15 மதிப்பெண்கள் நீங்கள் பணிகளைப் பெற வேண்டும் என்பதற்காக ஒதுக்கியிருக்கிறோம்” என்று கூறினார்.