போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கமா? – தமிழகம் அரசு மறுப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்ய உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்த தகவல்களை தமிழக அரசு மறுத்துள்ளது.

இது குறித்து உயர் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களைப் பணிநீக்கம் செய்யுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரால் ஆணையிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் நோக்கம் தற்போது பணிபுரிந்துவரும் கவுர விரிவுரையாளர்களை நீக்குவது அல்ல.

இதுவரை இல்லாத வகையில், முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆணைகளுக்கு இணங்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களும் கலந்துகொள்ளலாம்.

அவர்களுக்கு நேர்காணலில் மொத்தமுள்ள 30 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாக வழங்கப்படவுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளன. கவுரவ விரிவுரையாளர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்று பணிவாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசுக் கல்லூரிகளில் ஒரு சில கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. அவர்களும் போராட்டத்தைக் கைவிட்டு அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் எழுத்து தேர்வு முறையை கைவிட்டு, நேர்காணல் முறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும், சட்டக் கல்லூரிகளில் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதித் தேர்வு உடனடியாக நடத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தரவில், ‘அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும், இவர்களுக்கு மாற்றாக உரிய தகுதியுடன் இருக்கும் கவுரவ விரிவுரையாளர்களை யுஜிசி விதிகளின்படி நியமிக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணி கோரி வந்தால் அவர்களுக்கு பணி வழங்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது, இந்தத் தகவலை மறுத்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.