ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு; மழைக்கு முன் வந்த முக்கியத் தகவல்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களை நகர்வு செய்து, பாதுகாப்பாக சேமித்து வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் நகர்வு மற்றும் விநியோகத்தை அன்றாடம் கண்காணித்து, அனைத்து கிடங்குகள் மற்றும் நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் எந்தவொரு கிடங்கிலும் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பின் அதை சம்மந்தப்பட்ட மண்டல மேலாளர் / மாவட்ட வழங்கல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் / தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் கவனத்திற்கு உடன் எடுத்து செல்ல வேண்டும்.

அரிசி, மண்ணெண்ணெய், உப்பு, மெழுகுவர்த்தி, அவசர கால விளக்கு மற்றும் தீப்பெட்டிகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். இயற்கை பேரிடர் காரணமாக ஏற்படும் அவசர நிலையை எதிர்கொள்ள அதிகப்படியான மண்ணெண்ணெய் இருப்பு வைத்து கொள்ள ஏதுவாக தேவையான மண்ணெண்ணெய் பேரல்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பொது விநியோகத் திட்ட பொருட்களை நகர்வு செய்வதற்கு மாற்று வழி தடங்கள் மற்றும் முன்னேற்பாடு விவரங்கள் அடங்கிய அவசரகால திட்டம் ஒன்றினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் சேதமடைந்து, நுகர்வுக்கு ஏற்றதாக இல்லாத போது அப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு அதற்கு மாற்றாக நல்ல பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே அனுப்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை தகுதியான நிலையில் வைத்திருக்க வேண்டும். பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களை நகர்வு செய்யும் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் நல்ல நிலையிலான வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மழை காரணமாக நகர்வு பாதிக்காத வண்ணம் கட்டுப்பாட்டுப் பொருள்கள் நகர்வின் போது மழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க, நகர்வு வாகனங்களில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு நகர்வு செய்ய வேண்டும். மலைப் பிரதேசமான கொடைக்கானல், நீலகிரி மற்றும் வால்பாறை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் போது மண் சரிவு ஏற்பட்டு பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் நகர்வுப் பணியினை பாதிப்பு இல்லாமல் மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.