வீட்டில் மகாராணியை போல உலா வரும் அணில்; நெல்லை வீட்டில் நடக்கும் அதிசயம்!

நெல்லை மாவட்டம் வேப்பங்குளம் பகுதியை சேர்ந்தவர் தாவித்ராஜா கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு இரண்டு மகள் உள்ளனர். அதில் மூத்த மகள் பியூலா சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை உளவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் வீட்டின் அருகே உள்ள மரத்திலிருந்து அணில் குஞ்சு ஒன்று, தாவித் ராஜா வீட்டிற்குள் விழுந்துள்ளது இதனை கண்ட மூத்த மகள் பியூலா அணிலை பாதுகாத்து பராமரிக்க தொடங்கியுள்ளார். வீட்டில் ஒரு உறுப்பினராக மாறிய அணிலுக்கு சிட்டு என்ற பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார்.

அணிலுக்கு முதலில் வெள்ளை சாதம் வைத்து வளர்த்த நிலையில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் உண்ணும் உணவை எல்லாம் அது சாப்பிட தொடங்கியுள்ளது, இளநீர், தேங்காய், தக்காளி, வறுத்த வெங்காயம், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட உணவுகளை விரும்பி சாப்பிட தொடங்கியதனால் அதனையும் அவர்கள் அணிலுக்கு வைத்துள்ளனர். இது தவிர வீட்டில் குழந்தைகளுக்கு வாங்கி வைத்துள்ள தின்பண்டங்களையும் தேடிச் சென்று அணிலே சாப்பிட்டுகொள்வதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டின் எந்த பகுதியில் நின்றாலும் சிட்டு என அழைத்தால் உடனடியாக அவர்களை தேடி வந்து பார்த்து அவர்கள் மீது நின்று கொள்கிறது.

தாவீது ராஜா வீட்டில் இருந்த பையில் அணில் குட்டி போட்டதை கண்ட அவர்கள் அதனை எடுக்க முயற்சித்த போது அணில் அவர்களை தொடவிடாமல் செய்துள்ளது. இதனை அறிந்த அவர்கள் அணிலுக்கென தனியாக அட்டைப்பெட்டியில் வீடு போன்று அமைத்து வீட்டின் முகப்பு பகுதியில் ஆங்காங்கே தொங்கவிட்டுள்ளனர். தேவையான உணவுகளை உட்கொண்டு குழந்தைகளுடன் விளையாடி நேரத்தை கழித்த பின்னர் தானாகவே, அந்த பெட்டிக்குள் சென்று அணில் இருந்து கொள்கிறது. எட்டு குட்டிகள் வரை அணில் ஈன்றுள்ள நிலையில், அந்த அணில் குட்டிகளும் காலையில் வெளியே சென்று இரவு நேரத்தில் அந்த பெட்டிகளுக்குள்ளேயே வந்து தஞ்சம் புகுந்து கொள்கிறது.

இருப்பினும் சிட்டு என்ற பெயர் வைத்த அணில் அவர்களது வீட்டை சுற்றி சுற்றி இன்றளவும் வந்து கொண்டிருக்கிறது கொரோனா காலகட்டம் முடிந்து தாவீது ராஜாவின் மகள் சென்னை பல்கலைக்கழகத்திற்கு படிக்கச் சென்ற போதிலும் அவர்களது தாய் மற்றும் சகோதரி அணிலை குழந்தை போல் பராமரித்து வருகின்றனர். அக்கம் பக்கத்தினர் முதலில் அணில் வளர்க்கத் தொடங்கிய போது கைகளில் கடித்து வைத்து ரத்த காயம் ஏற்பட்டதை கண்டு அணிலை விரட்டி விடும்படி சொல்லியுள்ளனர். ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாது அவர்கள் அணிலே வளர்த்த நிலையில் தற்போது வீட்டில் மகாராணி போல அணில் பலம் வந்து கொண்டிருக்கிறது. இதனை கண்டு அக்கம் பக்கத்தினரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.