தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள GITEX கண்காட்சியில் பங்கேற்பதற்காக, நேற்று முன் தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து சென்றார்.
GITEX (Gulf Information Technology Exhibition) – எனும் “வளைகுடா தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி”, ஆண்டுதோறும் உலகளவில் நடக்கும் மிகப் பெரிய நிகழ்வாகும்.
சுமார் 170 நாடுகளில் இருந்து அரசு சார்ந்த தலைவர்கள், அமைச்சர்கள், தனியார் துறைச் சார்பாளர், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் முன்னோடிகள் போன்ற பலர் கலந்து கொள்ளும் இந்தக் கண்காட்சி, துபாய் உலக வர்த்தக மையத்தில் 10.10.2022 முதல் 14.10.2022 வரை நடைபெறுகிறது. மேலும், உலகம் முழுவதும் இருக்கும் புதுமையான கண்டுபிடிப்புகள், யோசனைகள் மற்றும் முயற்சிகள் மூலம் வணிகம் மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான சூழல்களை ஒருங்கிணைக்கும் தளமாக இந்தக் கண்காட்சி அமையும்.
எந்தவொரு தடையும் இன்றித் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் கடைக் கோடியில் இருக்கும் மக்களுக்கும் சென்றடைய, அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மேற்கொண்டு வருகிறது.
பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் (Climate Change and Global Warming) போன்ற பெரும் சவால்களைத் தொழில்நுட்பம் மூலம் குறைப்பது குறித்து விவாதிக்க, இந்தக் கண்காட்சியும், மாநாடும் உதவும். சுழிய கார்பன் உமிழ்வை (Zero Carbon Emission) அடைய வெறும் ஒப்பந்தங்கள் மட்டுமே தீர்வாகாது. உயர் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, இதுபோன்ற சவால்களுக்குத் தீர்வுகள் வழங்கும்.
இது போன்ற பெரும் இடர்பாடுகள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்த விவரங்கள் இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் இடம் பெரும்.