எங்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள் – தமிழக அரசுக்கு மத்திய இணையமைச்சர் வேண்டுகோள்

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் டிடு சேலத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார். இன்று காலை பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த அவர், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டடுக்கு  பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு தமிழகத்திற்கு பிரதம மந்திரி ஆதி ஆதர்ஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை கடந்த 4 ஆண்டுகளில் 13.9 கோடி ரூபாய் அளவிற்கு நிதியினை கொடுத்துள்ளது. வாழ்வாதாரத்திற்காக மட்டும் இதுவரை ரூ. 1,134 கோடி விடுவித்துள்ளது. இதுமட்டுமல்லாது, மலைவாழ் மாணவர்களின் கல்வி உதவிக்காக 2021-22ஆம் ஆண்டில் 540 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019- 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை, தமிழகத்திற்காக ஜல் சக்தி நீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இதுவரை 1,678 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் 53 சதவீதம் குடிநீர் திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு 4,532 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல இதுவரை ஒட்டுமொத்தமாக 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான நிதிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆனால் மாநில அரசு மத்திய அரசு கொடுக்கும் நிதிகளை முறையாக பயன்படுத்துவது கிடையாது. பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்துவதில் மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஜல் சக்தி திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு எந்த விதமான கட்டணமும் வசூலிப்பது கிடையாது. ஆனால் ஒரு சிலர் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் திமுக ஆட்சி குடும்ப ஆட்சியாக உள்ளது. மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு பெயரை மாற்றி மக்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக காட்டிக் கொள்கிறது. அரசு அலுவலகங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் படங்கள் மட்டுமே உள்ளன. மத்திய அரசுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உரிய நிதிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு எந்த விதமான பாகுபாடும் காட்டப்படவில்லை. எனவே மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.