சென்னை: நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்த வேல்முருகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் நேற்று மதியம் தீக்குளித்தார் வேல்முருகன். நேற்று மதியம், திடீரென ஒரு நபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டே ஓடி வந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பான் மற்றும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் தீக்குளித்த அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பதும், மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் வேல்முருகன் அவரது மகனுக்கு சாதி சான்றிதழ் கோரி, தமிழக அரசு நிர்வாகத்திடம் விண்ணப்பித்தும் தொடர்ந்து மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் சார்ந்த சமூகத்திற்கு தமிழகம் முழுவதும் சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால் அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததாகவும் வேல்முருகன் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று உயர் நீதிமன்றம் வந்தபோது காவலர்கள் அவரை தடுத்து பேசி கொண்டிருந்ததாகவும், அப்போது உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி லைட்டர் மூலம் உடலில் தீ வைத்து கொண்டார்.
80% க்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் இருந்த வேல்முருகனை போலீசார் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.