Attack Transgender in Tuticorin: தூத்துக்குடியில் திருநங்கைகளுக்கு முடியை வெட்டி துன்புறுத்திய இளைஞர்களை கைது செய்துள்ளதாக தமிழக தென்மண்டல காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் திருநங்கை ஒருக்கு முடியை வெட்டி இளைஞர்கள் சிலர் கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கழுகுமலையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த பகுதியில் உள்ள இரண்டு திருநங்கைகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதில் ஒரு திருநங்கையின் முடியை வெட்டி அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர். அதோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ட்விட்டரில் வீடியோவில் இடம்பெற்ற இளைஞர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, பாதிக்கப்பட்ட திருநங்கைகளையும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரும் முதல் திருநங்கை பொறியாளருமான கிரேஸ் பானு என்பவர் தான் முதலில் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து தமிழக போலீஸை டேக் செய்திருந்தார். அதன்தொடர்ச்சியாக திருநங்கையை தாக்கியும், முடிவை வெட்டியும் கொடுமை படுத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து பெண்களும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும். கழுகுமலையில் திருநங்கை ஒருவர் மீது நடத்தப்பட்ட வன்முறை வீடியோ மிகவும் வருந்தும் வகையில் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருந்த தமிழக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.