இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மதப் பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் மதவெறி தாக்குதல்கள் அதிக அளவில் தினமும் நடைபெறுகிறது. இந்து மதத்தை வைத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களை தாக்கும் சம்பவங்கள் பற்றிய செய்திகளை நாம் தினமும் பார்த்து கடந்திருப்போம். எங்கோ வெளி மாநிலங்களில் நடக்கும் விசயம் என நாம் பார்த்த சம்பவங்கள் தற்போது தமிழ்நாட்டில் நடக்க தொடங்கியுள்ளது. மத அடையாளங்களுக்காக ஒருவரை நேரடியாக தாக்குவது மட்டுமின்றி மறைமுக தாக்குதல்களும் நடைபெறுகிறது.
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல யூடியூப் ரிவியூவர் ரகுமான் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். செகண்ட் ஷோ என்ற யூட்டியூப் சேனலில் புது படங்களின் ரிவியூகளை பதிவேற்றி வருகிறார். தனது தனித்துவமான ரிவியூவால் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இந்நிலையில் ரகுமான் மற்றும் அவரது மனைவி இருவரும் சென்னையில் வாடகைக்கு வீடு தேடி உள்ளனர். பொதுவாக வாடகைக்கு வீடு தேடும் சமயத்தில் வீட்டின் உரிமையாளர் பல கண்டிசன்களை வைப்பார்கள். வீட்டில் ஆணி அடிக்க கூடாது, அடிக்கடி உறவினர்கள் வர கூடாது, தண்ணீர் அதிகம் பயன்படுத்த கூடாது, இன்னும் சிலர் நான் வெஜ் சமைப்பவர்களுக்கு வீடு கிடையாது என்றும் கூறுவார். ஆனால் இவர்களுக்கு அதற்கும் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
போரூர் பகுதியில் வீடு தேடும் போது, ஒரு வீட்டில் நீங்கள் முஸ்லிமா? அப்போத உங்களுக்கு வீடு தர முடியாது! இது எங்க அசோசியேஷன் ரூல்ஸ் என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து ரகுமான் தனது ஆதங்கத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். தன்னுடைய மத அடையாளங்களுக்காக வீடு தர மறுக்கும் அவலம் சென்னையிலும் நடைபெறுகிறது என்பதை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
மேலும் அவர் கல்லாரி படிக்கும் சமயத்திலும் நண்பர்களுடன் வீடு தேடும் போதும் இதே நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளார். ரகுமானின் இந்த பதிவிற்கு பின்னர் பலர் அவரை தொடர்பு கொண்டு தங்கள் ஏரியாவில் வீடு இருப்பதாகவும், சில தங்கள் வீட்டிலேயே ஒரு பகுதி காலியாக இருப்பதாகவும் அங்கு வந்து தங்கும்படியும் கூறியதாக மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் மாநகரமான சென்னையில் இப்படி சம்பவம் நடைபெறுவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.