சென்னை ரயில் நிலையத்தில் மாணவி கொல்லப்பட்ட விவகாரம்.
கொலையாளி சதீஷை சிறையில் தீவிரமாக கண்காணிக்கும் காவல்துறையினர்.
கல்லூரி மாணவி சத்யப்ரியாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் தற்கொலை செய்ய வாய்ப்புள்ளதால் 24 மணி நேரமும் பொலிசார் அவரை தீவிரமாக உஷார் நிலையில் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் சத்யப்ரியா (20). கல்லூரி மாணவி.
இரு தினங்களுக்கு முன்னர் அவர் கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த போது சதீஷ் (23) என்பவர் அவரை ரயிலுக்கு முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
தப்பியோடிய சதீஷை பொலிசார் கைது செய்தனர்.
சத்யப்ரியா மரணத்தை தாங்கி கொள்ள முடியாத அவர் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
காதல் விவகாரத்தில் சதீஷ் இந்த செயலை செய்தது தெரியவந்தது.
விசாரணையின் போது சத்யப்ரியாவை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்யலாம் என நினைத்தேன்.
ஆனால் மக்கள் கூடியதால் அங்கிருந்து தப்பி ஓடினேன் என சதீஷ் வாக்குமூலம் அளித்தார்.
மேலும் சிறையில் உள்ள சதீஷ் இரவு முதல் சத்தியப்பிரியாவை நினைத்து தூங்காமல் புலம்பி வந்துள்ளார்.
ஏற்கனவே தற்கொலை எண்ணத்தில் இருந்ததால் அவர் அம்முடிவை சிறையிலும் எடுக்கலாம் என கருதி பொலிசார் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வழக்கு விசாரணை சிபிஐக்கு சென்றுள்ள நிலையில் அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினர்.
தற்கொலை எண்ணத்தில் இருந்து அவரை மீட்கும் வகையில் சிறையில் கவுன்சிலிங் வழங்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டது சர்ச்சையானது நினைவுக்கூரத்தக்கது.