கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி அறுவடை பணிகள் மும்முரம்: விதை கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை

கரூர்: கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சூரியகாந்தி விதை கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் பணப் பயிராக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குறிப்பாக நிலக்கடலை ரப்பர், பருத்தி, புகையிலை ஆகிய பயிர்கள் , எள், ஆகிய பயிர்கள் முக்கியத்துவம் பெற்று வந்தன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவிலும் பாமாயில் மற்றும் சூரியகாந்தி பயன்பாடு அதிகமாக இருப்பதால் விவசாயிகள் சூரியகாந்தி பயிர் செய்வதில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர் குறிப்பாக, சூரியகாந்தி பயிர் ஒரு வெப்ப மண்டல பயிர் என்பதாலும், சுமார் 90 முதல் முதல் 95 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும் என்பதாலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் கடவூர் ஒன்றியம், தோகைமலை ஒன்றியம், கிருஷ்ணராயபுரம், பரமத்தி ஆகிய பகுதிகளில் அதிகமாக சூரியகாந்தி பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாக கடவூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலும் சூரியகாந்தி அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நிலக்கடலைக்கு அடுத்தபடியாக சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வரை சூரியகாந்தி பயிர் செய்யப்படுவதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூரியகாந்தி பயிரிலிருந்து முதிர்ச்சியடைந்த விதைகளை தேர்வு செய்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் தனியார் கமிஷன் தானிய மண்டிகளில் விவசாயிகளால் விற்பனை செய்யப்படுகிறது. நல்ல தரமான முதிர்ச்சியடைந்த திடகாத்திரமான சூரியகாந்தி விதை கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது .

ஒரு முறை பயிர் செய்தால் 90 நாட்களுக்கு பின் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 50 கிலோ எடை கொண்ட14 மூட்டை முதல் 18 மூட்டை வரை கிடைக்கிறது. சூரிய காந்தி பயிர்களுக்கு அதிக அளவில் பூச்சி மருந்து அதிக உரம் தேவையில்லை. களை வெட்டினால் போதுமானது . வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். தண்ணீர் தட்டுப்பாடான நேரங்களில் பத்து நாட்களுக்கு ஒரு தண்ணீர் கூட போதுமானது. தற்போது சூரியகாந்தி பயிர்களை கதிர் அறுக்கும் இயந்திரம் மூலம் அறுவடை செய்து உடனடியாக மூட்டைகளில் சூரியகாந்தி விதைகளை சேகரிக்கப்படுகிறது. மேலும் சூரியகாந்தி கதிர்கள் நன்கு முதிர்ச்சி அடைந்த நேரத்தில், மயில், மைனா, குருவி ஆகியவற்றால் அதிக சேதாரம் ஏற்படுகிறது. பெரும்பாலும் பறவைகளை பட்டாசு வெடித்தும், பெரிய அளவில் தகர டப்பாக்களில் சத்தம் எழுப்பியும் விவசாயிகள் தங்களது சூரியகாந்தி பயிர்களை காத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.