தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 24). முன்னாள் ராணுவ வீரரின் மகனான இவர் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். இவர் தாய் மாமா தேனியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது.
திருமணத்தன்று லண்டனில் இருந்த சஞ்சய் தாய்மாமா கல்யாணத்துக்கு வர முடியாத காரணத்தினால் போடியில் உள்ள வீட்டில் விருந்திற்காக இருவரையும் அழைத்துள்ளார். இன்று காலை போடி அருகாமையில் உள்ள பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக புதுமண தம்பதியரை அழைத்துச் சென்றுள்ளார். உடன் சித்தி மகன் பிரணவ் என்ற சிறுவனையும் அழைத்து சென்றுள்ளனர்.
எனவே போடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியாற்றுக் கோம்பை ஆற்றில் உள்ள பதினெட்டாம்படி கேணியில் குளிக்க நால்வரும் இறங்கியபோது பாறையில் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நால்வரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் பிரணவ் மட்டும் கரையேறி அருகாமையில் உள்ள ஒத்தக்கடை ராமராஜிக்கு தகவல் அளித்துள்ளார்.
ராம்ராஜ் காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போடி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.