பிட்புல் இன நாய்கள் சமீப காலங்களாக செய்திகளில் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஜூலை மாதம், உத்தரப் பிரேதசத்தின் லக்னோ நகரில் தனது உரிமையாளரின் 82 வயது தாயை பிட்புல் நாய் ஒன்று, கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த நாயை மாநகராட்சியினர் கைப்பற்றிய நிலையில், பின்னர் மீண்டும் அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த பேச்சு மறைவதற்கு முன்னரே, அதே உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரிலும் இதுபோன்ற கொடூர நிகழ்வு ஒன்று நடந்தது.
கான்பூரில் பிட்புல் நாய் ஒன்று ஆறுக்கும் மேற்பட்ட மனிதர்களையும், பசு மாட்டையும் கடித்த நிகழ்வு நடந்தேறியது. தொடர்ந்து, பஞ்சாபில் 13 வயது சிறுவனின் காதை பிட்புல் நாய் ஒன்று கடித்து துப்பியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பாலியர் குர்த் கிராமத்தில் பிட்புல் நாய் ஒன்று, ஒரு பெண்ணையும், இரண்டு சிறுவர்களையும் தாக்கியுள்ளது. நாயின் தாக்குதலை அடுத்தது, பெண்ணின் கால், கை, தலை உள்ளிட்ட இடங்களில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். மேலும், இரண்டு சிறுவர்களும் சிகிச்சையில் இருந்து குணமாகி நேற்று வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாலியர் குர்த் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான சுராஜ் தான் இந்த பிட்புல் நாயை வளர்க்கிறார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை மனைவி, குழந்தைகளுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அந்த நாய் அவரின் மனைவியையும், குழந்தைகளையும் தாக்கியுள்ளது.
அவர்களின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், அவர்களை நாயிடம் இருந்து மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாயின் உரிமையாளர் சுராஜ்,”தடியை எடுத்து பலமுறை அடித்தபோதிலும், அது தாக்குவதை விடவில்லை” என்றார்.
முன்னதாக, இதுபோன்ற தொடர் தாக்குதல்களை அடுத்து, பிட்புல் இன நாய்கள்களை வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கக்கோரி, விலங்குகள் நல அமைப்பான பீட்டாவைச் சேர்ந்த சிலர், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும், பிட்புல் வகை நாய்கள் சட்டவிரோதமான சண்டைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.