மாணவ – மாணவிகள், குழந்தைகளை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி மொடச்சூரில் ரைபிள் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. இதில், தமிழக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டுமே ரைபிள் ஷூட்டிங் இருந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளதால் நல்ல முன்னேற்றம் உருவாகும்.
போதைப் பொருளை முழுமையாக தடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளை காக்க முடியும். போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க, மாணவ – மாணவிகள், குழந்தைகளுக்கு போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்.
தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. அது மாதிரி போதைப் பொருள் கடத்தலுக்கும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளியே கூறும் அளவிற்கு விழிப்புணர்வு உள்ளது” என்று கூறினார்.