சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓபிஎஸ்-க்கே தொடரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வராமல் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கும், உத்தரபிரதேசம் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கும், கோவை தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதன் பிறகு சட்டசபையின் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலானது சட்டசபையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் பழைய நடைமுறை தொடர்கிறது. இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை, ஆர்.பி உதயகுமாருக்கு ஒதுக்கப்படாமல் பன்னீருக்கே தொடர்கிறது.
மேலும் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி உதயகுமார் பெயர் இடம் பெறவில்லை. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் உட்கார்ந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளார். அவர் தரப்பு எம்.எல்.ஏ-க்களும் சட்டசபை நிகழ்வில் இன்று பங்கேற்கவில்லை.