திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொட்டி வரும் பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் எச்சரிக்கையுடன் செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், காசர்கோடு, இடுக்கி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களின் எல்லை பகுதியில் மிக பலத்த மழை கொட்டுகிறது.
இதனால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஆவேசமாக பாய்ந்து வருகிறது. நேரியமங்கலம் – பனம்குட்டி சாலையில் நீண்ட பாறை அருகே மழைநீர் வடிகால் கால்வாய் இடிந்து விழுந்ததால் சாலைகளில் வெள்ளம் பாய்கிறது. இதனால் மலைப்பாதையில் பயணிக்க முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீயபாறை அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேரள அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கேரளா முழுவதும் பரவலாக இன்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், காற்று வழக்கத்தை விட மிக பலமாக வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.