டெல்லி: காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்ய மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வாக்குப்பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே, சசிதரூர் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ள நிலையில் வாக்கு பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் இடைகால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வாக்குகளை செலுத்துகின்றனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் இந்த தேர்தலின் மூலம் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம், மாநில அலுவலகம் உள்ளிட்ட நாடு முழுவதும் இருக்க கூடிய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்பொழுது தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இரண்டு பேர் இடையே நேரடி போட்டி தற்பொழுது தொடங்கியிருக்கிறது. காலை 10 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் உள்ள பொதுகுழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், பொதுச்செயலர்கள் உள்ளிட்ட 9,300 பேர் வாக்கு அளிக்க தகுதியுள்ள நபர்களாக இருக்கின்றனர். டெல்லியில் முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் பா.சிதம்பரம் முதலாவதாக தன் வாக்கை செலுத்தி இருக்கிறார்.
மேலும், டெல்லியில் இருக்கக்கூடிய தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் உள்ளிட்ட 75 பேர் தங்களுடைய வாக்கை செலுத்த இருக்கிறார்கள். வாக்கு பதிவினை தேர்தல் குழுத்தலைவர் மதுசூதன் ரெட்டி நேரடியாக ஆய்வினை மேற்கொண்டு, பாதுகாப்பான முறையில் இந்த வாக்கு பதிவு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் முடிவு 19-ம் தேதி காலை 10 மணியளவில் அனைத்து வாக்கு பெட்டிகளும் டெல்லி கொண்டு வரப்பட்டு முழுமையாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று உடனடியாக இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.