பீஜிங்,
உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீன அதிபர் ஜின்பிங்
சீனாவின் அரசியல், பொருளாதார ஆதிக்கம் கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. இதற்கு முழுமுதற் காரணமானவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங். இவர் சீனாவின் அதிபராக கடந்த 2013-ம் ஆண்டு பதவியேற்றார்.
அதைத் தொடர்ந்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக பல்வேறு புதிய சட்ட திட்டங்களையும், பல்வேறு துறைகளில் மாற்றங்களையும் கொண்டுவந்து, நவீன சீனாவை கட்டமைத்தார். இவரது ஆட்சியில் சீன பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டது.
இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் உச்சி மாநாட்டில் ஜின்பிங் 2-வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
அதிபர் பதவிக்கான கால வரம்பு
சீன அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் தொடர்ந்து 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்கிற வரம்பு இருந்தது.
ஆனால் ஜின்பிங் 2-வது முறையாக அதிபராக பதவியேற்ற அதே ஆண்டு அதிபர் பதவிக்கான 10 ஆண்டு கால வரம்பு, சட்டபூர்வமாக நீக்கப்பட்டு, அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து ஜின்பிங்கை 3-வது முறையாக அதிபர் பதவியில் தொடர வழிவகுக்கும் தீர்மானமும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர் அதிகாரம் படைத்த மத்திய குழுவால் நிறைவேற்றப்பட்டது.
உச்சி மாநாடு தொடங்கியது
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் உச்சி மாநாட்டில் ஜின்பிங் 3-து முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இதனால் அப்போதில் இருந்தே இந்த மாநாட்டின் மீது மிகுந்த எதிபார்பார்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில் அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. தலைநகர் பீஜிங்கில் கட்சியின் பொதுச்செயலாளரும், நாட்டின் அதிபருமான ஜின்பிங் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார்.
ஒரு வாரம் நடைபெறும் இந்த மாநாட்டில் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஜின்பிங்கை 3-வது முறையாக அதிபராக தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 69 வயதாகும் ஜின்பிங், தனது ஆயுள் முழுவதும் சீனாவின் அதிபராக நீடிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஜின்பிங் 45 நிமிடம் உரை
இதனிடையே மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய ஜின்பிங், ஹாங்காங் மற்றும் தைவான் விவகாரம், கொரோனா தொற்றை ஒழிக்கும் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசாரமாக பேசினார். சுமார் 45 நிமிடம் நீடித்த அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
ஹாங்காங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹாங்காங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது. இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது.
அதேபோல், தைவான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது.
ஒருபோதும் தயங்க மாட்டோம்
தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். இருப்பினும் தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்த ஒரு போதும் தயங்க மாட்டோம்.
கொரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை சீனாவின் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. சீனாவைப் பொறுத்தவரை மக்களும், அவர்களின் உயிரும் நலனும் தான் முதலில் முக்கியத்துவம் பெற்றது. பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கை மூலம் சீனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் உடல்நலனை சிறப்பாக பேணியது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த ராணுவத்தைக் கட்டமைப்பதில் சீனா எப்போதும் அதிக கவனம் செலுத்தும்.
இவ்வாறு ஜின்பிங் பேசினார்.