பாட்னா: டெல்லி – கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், “டெல்லி – கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் எண் 12274ல் ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் பிஹார் மாநிலம் பாட்னா அருகே கொள்ளைச் சம்பவம் நடந்தது. திடீரென ரயிலை யாரோ அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தச் செய்துள்ளனர். பாட்னா ரயில் நிலையத்திலிருந்து சரியாக 10 கி.மீ தொலைவில் இச்சம்பவம் நடந்தது. உடனே சில பெட்டிகளுக்குள் துப்பாக்கிகளுடன் கொள்ளையர்கள் ஏறினர். அவர்கள் பயணிகளிடமிருந்து விலையுயர்ந்த பொருட்களை மிரட்டிப் பறித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா ரயில் நிலையத்தில் இறங்கிய ரயில்வே போலீஸார் செல்போன், சார்ஜர்களை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுமாறு கூறிச் சென்றதாக ரயிலில் இருந்த கொல்கத்தா செல்லவிருந்த பயணி ஒருவர் கூறினார். ரயில் கொல்கத்தா சென்றதும் பயணிகள் தங்களின் உடைமைகள் காணாமல் போனது பற்றி புகார் கொடுத்தனர்.
ஒரு காலத்தில் பிஹாரின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் கொள்ளைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் பழைய நாட்களை நினைவுபடுத்துவதாக இருப்பதாக பயணிகள் அச்சத்தைத் தெரிவித்தனர்.