திண்டுக்கல் அருகேயுள்ள கோயிலில் ராஜராஜன் காலத்து நாணயங்கள் : கண்காட்சியாக வைக்க திட்டம்

 சின்னாளபட்டி : ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள கோயிலில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த பழம்பெரும் பொருட்களை பொக்கிசமாக பாதுகாத்து வருகின்றனர். இவற்றை மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் கண்காட்சியாக வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் பாதாள செம்பு முருகன் கோயில் இருக்கிறது. இதன் பரம்பரை அறங்காவலராக அறிவானந்த சுவாமிகள் உள்ளார். இவர் பழம் பொருட்களை பாதுகாத்து வருகிறார். தங்கள் மூதாதையர்களின் பரம்பரை சொத்தான விலைமதிப்பில்லாத ஆபரணங்கள் மற்றும் கலைநயமிக்க பொருட்களை பாதுகாத்து வரும் இவர், கோயிலில் இந்த பொருட்களை தகுந்த பாதுகாப்புடன் கண்காட்சியாக வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

ராஜராஜசோழன் காலத்து காசுகள், பரசுராமன், சிவன், எல்லையம்மாள் என்ற ரேணுகாதேவி செப்புக்காசுடன் யானை தந்தந்தால் கலைநயமிக்க வடிவமைப்பு உருவாக்கப்பட்ட கையில் அணியும் காப்புகள், இரட்டை தலை நந்திகள், யானை தந்தத்தால் ஆன பாசிகள், மணிகள் மற்றும் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பு சிலைகள் இங்கு இருக்கிறது.

இதுகுறித்து அறிவானந்த சுவாமிகள் கூறும்போது, ‘‘பாஸ்கரசேதுபதி வம்சாவளியில் வந்த மிராசுதார் கந்தமாறன் பேரனாகிய நான், மக்கள் நலனுக்காக பாதாள செம்பு முருகன் கோயிலை கட்டினோம். எங்களுடைய மூதாதையர்கள் 1,400ம் ஆண்டு முதல் தொடர்ந்து பாதுகாத்து வந்த விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களை கோயிலில் கண்காட்சியாக வைக்க திட்டமிட்டுள்ளேன்.

பழமையான காசுகள் மற்றும் நேபாள நாட்டு மன்னர் எங்களுடைய மூதாதையர்க்கு அளித்த ருத்ராட்சங்கள் என பல பொருட்கள் இங்கு இருக்கிறது. இவற்றை பார்ப்பவர்கள் நமது பாரம்பரியத்தை, தமிழர்கள் திறனை தெரிந்து கொள்வார்கள்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.