பிழைப்புக்காக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்…| Dinamalar

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

மியான்மர் நாட்டில் சட்டவிரோத கும்பலிடமிருந்து நீண்ட போராட்டத்திற்கு பின் மீண்ட, தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அவர்கள் குற்றவாளிகள் அல்ல. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஒன்பது பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்.

பிழைப்புக்காக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்… இவ்விஷயத்தில் அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.

இசையமைப்பாளர் தினா அறிக்கை:

ஆங்கிலேயர்கள், 1935ல் இந்திய அரசுக்கான சட்டத்தை இயற்றினர். ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல் மத்திய அரசு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே பின்பற்றுகிறது. பின், எதற்கு மனுநீதி, சனாதனம் என்றெல்லாம் மக்களை குழப்புகின்றனர்… மத்திய அரசும், பிரதமர் மோடியும் சட்டமேதை அம்பேத்கரின் அரும்பணிகளை பாராட்டியே வருகின்றனர். பின், எதற்கு இந்த வீண் அரசியல்?

என்ன இப்படி சொல்லிட்டீங்க… இப்படி ‘அரசியல்’ செஞ்சு தானே ஆட்சியையே பிடிச்சுருக்காங்க!

சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை:

மூன்று லட்சம் சொற்களை உடைய தமிழ் களஞ்சியத்தில் இருந்து, 50 சொற்களைக் கூட கையாளத் தெரியாத ஒரு இனமாக தமிழ் இனம் மாறிக் கொண்டிருக்கிறது. பிற மொழி சொற்கள் கலக்காமல் பேசவோ, நான்கு வரிகள் பிழை இன்றி எழுதவோ முடிவதில்லை. ஆனால், எதற்கெடுத்தாலும் சங்க இலக்கியங்களை பெருமையாக மேற்கோள் காண்பித்து, தமிழை ஓசையில்லாமல் அழித்து வருகிறோம். தமிழர்கள் எனும் பெயரில் சிறிதும் குற்ற உணர்வின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் இப்படி உண்மையை போட்டு உடைத்தால், ‘ஹிந்தி வந்தால், தமிழ் அழிந்து விடும்’ என பூச்சாண்டி காட்டியே அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சித் தலைவர்கள் என்ன செய்வர்?

மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை:

‘வெளிநாட்டு மருத்துவக் கல்லுாரிகளில் பயின்ற மாணவர்கள், இந்தியாவில் நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஓராண்டு கட்டாய மருத்துவப் பயிற்சி மேற்கொண்டால், தங்களை மருத்துவர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்’ என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு மாநிலங்களில், அவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிகின்றனர். ஆனால், அயல்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற நுாற்றுக்கணக்கான மாணவர்கள், தமிழகத்தில் மட்டும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி மருத்துவராகப் பணிபுரியக் காத்திருக்கின்றனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துாக்கம் வராமல் முதல்வர் கஷ்டப்படுறார்… கட்சியினரை சமாளித்த பின், ஆட்சி குறித்து அவர் சிந்திப்பார்.

அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., முனுசாமி பேட்டி:

தேர்தலுக்கு முன், தி.மு.க., 520 வாக்குறுதிகளை கொடுத்தது. ஆட்சி பொறுப்பேற்று, 16 மாதங்களில் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் நிறுத்தியுள்ளது. ஆட்சியின் தோல்வியை திசை திருப்பவே, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

நடக்காத ஒரு செயலை நடந்துச்சுன்னு சொல்லி, அதுக்காக, போராட்டம் நடத்துறது எல்லாம், தமிழகத்தில் நீண்ட காலமாக சில கட்சிகள் பின்பற்றி வரும் ‘நல்ல’ கொள்கை தானே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.