ராணுவத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் தைவான் விவகாரத்தில் சீன அதிபர் எச்சரிக்கை| Dinamalar

பீஜிங் : ‘தைவானை இணைப்பதற்கு, தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்’ என, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம் அண்டை நாடான சீனா, அதன் மற்றொரு அண்டை நாடான தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்துள்ளது. தன்னாட்சி உள்ள தைவானை தன்னுடன் இணைப்பதற்கான முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு தைவானில் எதிர்ப்பு உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் சீனாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின், ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு நேற்று துவங்கியது. ஒரு வாரத்துக்கு நடக்கும் இந்த மாநாட்டில், சீன அதிபராக ஷீ ஜிங்பிங் மூன்றாவது முறையாக தொடர்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த மாநாட்டின்போது, கட்சித் தலைவராக உள்ள ஜிங்பிங் தவிர, மற்ற அனைவரும் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சி மாநாட்டை துவக்கி வைத்து ஷீ ஜிங்பிங் நேற்று பேசியதாவது:

நம்மிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு மாகாணமான தைவானை, மீண்டும் நம்முடன் இணைக்க உள்ளோம். தைவானில் உள்ள மக்களும் இதையே விரும்புகின்றனர். ஆனால், சில வெளிநாட்டு சக்திகள் தூண்டுதலால், சில பிரிவினைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமைதியான முறையில் இணைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதே நேரத்தில், இந்த பிரிவினைவாதிகளை ஒடுக்கி, தைவானை நம்முடன் இணைப்பதற்கு ராணுவத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்.

நம் ராணுவம், 2027ல் நூற்றாண்டை நிறைவு செய்ய உள்ளது. உலக அளவில் மிகச் சிறந்த படையாக நம் ராணுவம் விளங்குகிறது. அதற்கு தேவையான அனைத்து நவீன ஆயுதங்கள், தளவாடங்கள் வழங்கப்படும்.

நம் ராணுவம் முழுமையான அளவுக்கு தயார் நிலையில் இருக்கும் வகையில், தேவையான பயிற்சிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி வழங்கும். தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவோம். உத்தரவுகளை நம் ராணுவம் செயல்படுத்தும் வகையில், கட்சி வலுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைப்புகளுக்கு எதிர்ப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்த அறிக்கையை, அதிபரும், கட்சி பொதுச் செயலருமான ஜிங்பிங் சமர்ப்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு, ஐ.நா., போன்ற அமைப்பு உள்ளது. ஆனால், சீனாவை எதிர்ப்பதற்காக சில நாடுகள் இணைந்து சிறு குழுக்கள் அல்லது அமைப்புகளை உருவாக்கி வருகின்றன. இதை தேவையில்லாத நடவடிக்கை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.