ATM-ல் பணம் மட்டுமல்ல இனி சூடான இட்லியும் கிடைக்கும்! வைரலாகும் இட்லி ATM!

பொதுவாக நாம் ஏடிஎம் மையங்களை எதற்காக பயன்படுத்துவோம் என்றால் பணம் எடுக்க தான், வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் எந்த வங்கியின் கிளையில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை பெற்று கொள்ளலாம்.  இதுவரை ஏடிஎம்-ல் பணத்தை மட்டுமே பார்த்த நமக்கு தற்போது ஒரு வித்தியாசமான ஏடிஎம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது, அதுதான் இட்லி ஏடிஎம்.  இந்த ஏடிஎம்-ல் பணம் வராது, சூடாக இட்லி தான் வரும், இட்லி மட்டுமல்ல அதற்கு தொட்டுக்கொள்ள பொடி மற்றும் சட்னியும் சேர்ந்து வருகிறது.  இந்த வித்தியாசமான இட்லி ஏடிஎம் பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ளது, இந்த இயந்திரம் வெறும் 12 நிமிடங்களில் கிட்டத்தட்ட 72 இட்லிகள் வரை சைட்டிஷும் சேர்த்து தயார் செய்து விடுமாம்.  சூடாக இட்லியை தரும் இந்த இயந்திரத்தின் வீடியோ தான் தற்போது இணையத்தில் சூடாக பரவி வருகிறது.

இந்த இயந்திரத்தில் நீங்கள் இட்லியை பெற வேண்டுமானால் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும், உங்கள் ஆர்டர் உறுதிசெய்யப்பட்டு உங்கள் மொபைலுக்கு ஒரு கோட் வரும், அதை நீங்கள் ஸ்கேன் செய்ததும் உங்களுக்கான உணவு சில மணித்துளிகளில் உங்கள் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும்.  இந்த இயந்திரம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து இதனை வடிவமைத்த பொறியாளர் கூறுகையில், கடந்த 2016ம் ஆண்டு தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது, அப்போது அவருக்கு உணவளிக்க இட்லி தேவைப்பட்டது, இரவு நேரத்தில் சூடான இட்லியை பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது.  இதுபோன்ற உணவுகள் எந்நேரமும் கிடைக்க ஒரு தானியங்கு இயந்திரம் தேவை என உணர்ந்து இதனை வடிவமைத்ததாக கூறினார்.

 

இந்த இயந்திரம் இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது, புதிய கண்டுபிடிப்புகளுக்கு என்றுமே மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும் அதேபோல இந்த இயந்திரத்தையும் பலரும் வரவேற்கின்றனர்.  இந்த இயந்திரம் 24 மணி நேரமும் எந்த தடையும் இல்லாமல் இயங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.  இட்லியும் சிறந்த பேக்கேஜிங்கில் வெளிவருகிறது, இந்த வீடியோ பலரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.