அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் சாதித்திருக்கிறார் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி தேவதர்ஷினி. இவர் நீட் தேர்வில் 518 மதிப்பெண் பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இச்சாதனை குறித்து மாணவி தேவதர்ஷினி நம்மிடம் கூறியது, ”கவுந்தப்பாடியை அடுத்த பொம்மன்பட்டிதான் எங்க கிராமம். எங்க அப்பா வேலுச்சாமி நெசவுத் தொழிலாளி. தாயார் பெயர் கோடீஸ்வரி. தந்தை வேலுச்சாமி 6 மாசத்துக்கு முன்பு மாரடைப்பால் காலமாகிவிட்டார். என் தாயார் அய்யம்பாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் உதவியாளராகப் பணிபுரிகிறார்.
சின்ன வயசுல இருந்தே என்னை டாக்டராக்கணும்னு என் பெற்றோருக்கு ஆசை. அதைச் சொல்லிச் சொல்லியே அப்பாவும் அம்மாவும் வளர்த்தாங்க. நானும் டாக்டராகும் கனவுலதான் படிச்சேன். போன 2020-21-ல் பிளஸ் டூ முடிச்சிட்டேன். பிளஸ் டூ-வில் 576 மதிப்பெண் வாங்கினேன்.
போன 2021-ல் எழுதின நீட் தேர்வில் 180 மதிப்பெண் வாங்கினேன். ஆனா எனக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கல.
அதனால இன்ஜினீயரிங் சேர முடிவு செய்து கோவைத் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. சேர்ந்துட்டேன். ஒரு மாசம் ஆன்லைன்ல கிளாஸ் நடந்தது.
நீட் தேர்வில் 180 மதிப்பெண் வாங்கினதால என்னுடைய ஆசிரியர்தான் என்னை ஊக்கப்படுத்தினார். எந்த நோக்கத்துக்காக நாம படிச்சமோ அதை நிறைவேற்றாமல் இன்ஜினீயரிங் படித்து என்ன செய்வது என்று நினைத்து, பி.இ. பாடத்தை டிஸ்கன்ட்டினியூ செஞ்சிட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் கடந்த ஆண்டு சேர்ந்தேன்.
தினமும் 15 முதல் 16 மணி நேரம் படிச்சேன். தொடர்ந்து ரிவைஸ் பண்ணிட்டு இருப்பேன். இடைவிடாத முயற்சியால இப்போ 518 மார்க்குடன் தமிழக அளவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டு தரவரிசையில முதலிடம் கிடைச்சிருக்கு.
சின்னதுல இருந்து கிராமப்பகுதியிலதான் வளர்ந்து வர்றேன். இல்லாதவங்களுக்கும், கஷ்டப்படுறவங்களுக்கும் மருத்துவம் பார்க்கணும். நான் டாக்டர் ஆனா ஏழைகளுக்கு உதவி செய்வேன்” என்றார்.
வாழ்த்துகள் தேவதர்ஷினி!