கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே விநாயகபுரம் கொழை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (55). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவர் பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் இருந்தபோது, 10-ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி, வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். அப்பொழுது ஆசிரியர், ஏன் என்னுடன் சரியாக பேசுவதில்லை என்று கூறி, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையடுத்து, வீட்டுக்கு சென்ற மாணவி மனவேதனையில் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவி க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.