மத்திய பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது மகன் தனது தந்தையுடன் காவல் நிலையத்துக்கு வந்து தனது தாயை சிறையில் அடைத்திடுமாறு கூறியுள்ளான். அதை கேட்டு வியப்பான காவல் ஆய்வாளர் பிரியங்கா நாயக், சிறுவனை அருகில் அமர வைத்து நடந்தவற்றை விவரிக்குமாறு கேட்டார்.
அப்போது அந்த சிறுவன், எனது தாய் எனது சாக்லேட்டுகளை திருடிவிட்டார். நான் அதை கேட்டபோது என்னை கன்னத்தில் அடித்துவிட்டார். எனவே, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று சிறுவன் கூறியுள்ளான். அதை கேட்ட காவல் ஆய்வாளர் உட்பட அனைத்து காவலர்களும் கலகலவென சிரித்தனர். அதன் பின்னர், ஆய்வாளர் பிரியங்கா சிறுவன் அருகே அமர்ந்துகொண்டு புகார் எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன் என கூறி ஒரு பேப்பரையும், பேனாவையும் சிறுவனுக்கு கொடுத்துள்ளார்.
வேடிக்கையாக அந்த சிறுவனும் பேப்பரில் எதையோ கிறுக்க, அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. அதன் பின்னர் சிறுவனிடம் அன்பாக பேசிய இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக், அம்மா நல்லதுக்காகத்தான் உன்னை கண்டித்துள்ளார் எனக்கூறி அச்சிறுவனை தந்தையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், சிறுவர்கள் போலீசிடம் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று இன்ஸ்பெக்டர் பிரியங்கா தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு லைக்ஸுகளை பெற்று வருகிறது.