கான்பரா: ஜெர்சலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா அறிவித்தது. இந்த நிலையில், இம்முடிவை ஆஸ்திரேலியா மாற்றியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் பேசும்போது, “ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த முன்னாள் அரசின் முடிவை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். அவை ஒருதலைப்பட்சமான முடிவுகளாக இருக்கக் கூடாது.
இரு நாடுகளின் பேச்சுவார்த்தைகளை தடுக்கும் முடிவுகளை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஆஸ்ரேலியாவின் வெளியுறவுத் துறை அலுவலகம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தொடர்ந்து செயல்டும். ஆஸ்திரேலியா எப்போதும் இஸ்ரேலின் உறுதியான நண்பனாக இருக்கும். இஸ்ரேலை முறையாக அங்கீகரித்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்றார்.
ஆஸ்திரேலிய முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் கூறும்போது, “ஜெருசலேம் இஸ்ரேலின் ஒன்றுபட்ட தலைநகரம். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2017-ஆம் ஆண்டு ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்குத் தொடர்ந்து இருக்கும் என்று அறிவித்தார். ஆனால், ஜெருசலேத்திற்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்காமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.