ஜெ., மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் இடம்பெற்ற கலைஞர்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்காக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சசிகலா, சி.விஜயபாஸ்கர், பிரதாப் ரெட்டி உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 613 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையில், இரண்டு திருக்குறளும் இடம்பெற்றுள்ளன. அவை, ”நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் சொல்”. இது மருந்து அதிகாரம் 95ல் 948வது குறளாக அமைந்துள்ளது. இதற்கு கலைஞரின் உரை இடம்பெற்றிருப்பது தான் ஹைலைட். அதாவது, நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன?

நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். உடல் நோய்க்கு மட்டுமின்றி சமுதாய நோய்க்கும் இது பொருந்தும் எனக் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ”காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு” என்ற மற்றொரு குறள் இடம்பெற்றுள்ளது. இது இடனறிதல் அதிகாரம் 50ல் 500வது குறளாக அமைந்திருக்கிறது.

இதற்கு டாக்டர் மு.வரதராசன் அவர்களின் உரை இடம்பெற்றுள்ளது. அதில், வேல் ஏந்திய வீரரை கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திருக்குறளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உரையை குறிப்பிட்டு, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது அறிக்கை விட்டு அப்போதே எச்சரித்தார். ஆனால் சசிகலா உள்ளிட்டோர் தான் தவறவிட்டு விட்டனர். தற்போது சிக்கல்களை சந்திக்கும் நிலைக்கு ஆளாகியிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.